இந்தியா - அயர்லாந்து மகளிர் அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணிக்கு ஸ்மிருதி மந்தனா மற்றும் பிரதிகா ராவல் இணை ஆரம்பம் முதலே அதிரடியாக விளைடாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.

Advertisement

தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்மிருதி மந்தனா சர்வதேச ஒருநாள் போட்டியில் தனது 10ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்திய நிலையில், பிரதிகா ராவல் தனது இரண்டாவது சதத்தை விளாசினார். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 233 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அதன்பின் ஸ்மிருதி மந்தனா 135 ரன்களிலும், பிரதிகா ராவல் 154 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழந்தனர். 

Advertisement

அதன்பின் களமிறங்கிய ரிச்சா கோஷும் 59 ரன்களைச் சேர்த்து அசத்தினார். இதன்மூலம் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 435 ரன்களைக் குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய அயர்லாந்து அணி, இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். இதனால் அயர்லாந்து அணி 131 ரன்னில் ஆல் அவுட் ஆனது.

அந்த அணியில் அதிகபட்சமாக சாரா ஃபோர்ப்ஸ் 41 ரன்களையும், ஓர்லா பிரெண்டர்காஸ்ட் 36 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர். இந்திய அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய தீப்தி சர்மா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன்மூலம் இந்திய அணி 304 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், 3-0 என்ற கணக்கில் அயர்லாந்தை ஒயிட்வாஷ் செய்தும் அசத்தியது.

இந்நிலையில் இப்போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி சதமடித்து அசத்திய இந்திய அணி கேப்டன் ஸ்மிருதி மந்தனா வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளார். அந்தவகையில் ஸ்மிருதி மந்தனா இன்று தனது 10ஆவது சர்வதேச சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இதன்மூலம் சர்வதேச மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிக சதங்களை அடித்தை வீராங்கனை எனும் சாதனையைப் படைத்து அசத்தியுள்ளார். 

இதுதவிர மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் 10 அல்லது அதற்கு மேற்பட்ட சதங்களை அடித்த முதல் ஆசிய பெண் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை ஸ்மிருதி மந்தனா பெற்றார். மேற்கொண்டு மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீராங்கனைகளின் பட்டியலில் அவர் கூட்டாக மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார். இதில் இங்கிலாந்தின் டாமி பியூமண்ட் 10 சதங்களுடன் மூன்றாம் இடத்தில் உள்ளார். இந்த பட்டியலில் ஆஸ்திரேலியாவின் மெக் லெனிங் 15 சதங்களுடன் முதலிடத்திலும், நியூசிலாந்தின் சூஸி பேட்ஸ் 13 சதங்களுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளனர். 

Advertisement

அதேசமயம் இப்போட்டியில் ஸ்மிருதி மந்தனா 70 பந்துகளில் சதமடித்து அசத்தி இருந்தார். இதன்மூலம் மகளிர் ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக சதம் அடித்த இந்திய வீராங்கனை எனும் ஹர்மன்பிரீத் கவுரின் சாதனையை முறியடித்துள்ளார். முன்னதாக கடந்தாண்டு பெங்களூருவில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியின் போது ஹர்மன்பிரீத் கவுர் 87 பந்துகளில் சதமடித்ததே சாதனையாக இருந்த நிலையில் அதனை ஸ்மிருதி மந்தனா முறியடித்துள்ளார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News