சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த ஸ்மிருதி மந்தனா!

Updated: Fri, Jan 10 2025 19:50 IST
Image Source: Google

இந்தியா - அயர்லாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று வதோதராவில் உள்ள சௌராஷ்டிரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 238 ரன்கள் குவித்தது.

இதில் அதிகபட்சமாக கேப்டன் கேபி லூயிஸ் 92, லியா பால் 59 ரன்கள் எடுத்தனர். இந்திய தரப்பில் பிரியா மிஸ்ரா 2 விக்கெட்டுகளை விழ்த்தினார். இதனையடுத்து இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகளாக மந்தனா- பிரதிகா களமிறங்கினர். இருவரும் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியதுடன் முதல் விக்கெட்டிற்கு 70 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர். அதன்பின் ஸ்மிருதி மந்தனா 41 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

அதன்பின் களமிறங்கிய ஹர்லீன் தியோல் 20, ஜெமிமா ரோட்ரிக்ஸ் 9 என ஆகியோரும் விக்கெட்டை இழக்க, இப்போட்டியில் அபாரமாக விளையாடிய பிரதிகா ராவல் 89 ரன்களைச் சேர்த்து தனது விக்கெட்டை இழந்தார். இருப்பினும் இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த தேஜல் ஹசாப்னிஸ் 53 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் இந்திய மகளிர் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.

இந்நிலையில் இப்போட்டியில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 40 ரன்களைச் சேர்த்த நிலையில், சர்வதேச மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் 4000 ரன்கள் என்ற மைல்கல்லை பூர்த்திசெய்தார். இதன்மூலம் சர்வதேச மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் இந்த மைல் கல்லை எட்டிய இரண்டாவது இந்திய வீராங்கனை எனும் பெருமையையும் ஸ்மிருதி மந்தனா பெற்றார். இதுவரை இந்தியா சர்வதேச மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் மிதாலி ராஜ் மட்டுமே 4000 ரன்களை கடந்து இந்த சாதனையை எட்டியுள்ளார். 

 

அவர் 232 போட்டிகளில் 211 இன்னிங்ஸ்களில் 7,805 ரன்கள் எடுத்து முதலிடத்தில் உள்ள நிலையில், தற்போது ஸ்மிருதி மந்தன 95 போட்டிகளில் 4001 ரன்களைக் குவித்து இரண்டாம் இடத்தில் உள்ளார். இதில் அவர், 9 சதங்கள் மற்றும் 29 அரைசதங்களை பதிவுசெய்துள்ளார்.

Also Read: Funding To Save Test Cricket

இது தவிர, மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் மிகக் குறைந்த இன்னிங்ஸ்களில் 4000 ரன்களை எட்டியதன் அடிப்படையில் ஸ்மிருதி மந்தனா மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளார். இந்த பட்டியலில் ஆஸ்திரேலியாவின் பிளெண்டா கிளார்க் 86 இன்னிங்ஸ்களிலும், மெக் லானிங் 89 இன்னிங்ஸ்களிலும் 4000 ரன்களைக் கடந்து இந்த பட்டியலின் முதலிரண்டு இடங்களில் உள்ளனர். அதேசமயம் மிதாலி ராஜ் 112 இன்னிங்ஸில் இந்த மைல் கல்லை எட்டினார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை