ஐசிசி மகளிர் டி20 தரவரிசை: முதலிடத்தை நெருங்கும் ஸ்மிருதி மந்தனா!

Updated: Tue, Jul 01 2025 14:52 IST
Image Source: Google

Womens T20I Rankings: ஐசிசி மகளிர் டி20 வீராங்கனைகளுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா மூன்றாம் இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார். 

ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரானது தற்சமயம் நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய மகளிர் அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து மகளிர் அணியை வீழ்த்தியதுடன் 1-0 என்ற கணக்கில் டி20 தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது.

இப்போட்டியில் சதமடித்து அசத்திய இந்திய மகளிர் அணி கேப்டன் ஸ்மிருதி மந்தனா ஆட்டநாயகி விருதை வென்றார். இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீராங்கனைகளும் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மகளிர் டி20 வீராங்கனைகளுக்கான புதுபிக்கப்பட்ட தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. 

இதில் பேட்டர்களுகான தரவரிசையில் முதல் இடத்தில் ஆஸ்திரேலியாவின் பெத் மூனியும், இரண்டாம் இடத்தில் வெஸ்ட் இண்டீஸின் ஹீலி மேத்யூஸும் தொடர்கின்றனர். அதேசமயம் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் சதமடித்து அசத்திய ஸ்மிருதி மந்தனா ஒரு இடம் முன்னேறி மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளார். மேற்கொண்டு இந்திய வீராங்கனை ஷஃபாலி வர்மாவும் ஒரு இடம் முன்னேறி 13ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். 

பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் பாகிஸ்தானின் சதியா இக்பால் முதலிடத்தில் தொடரும் நிலையில், ஆஸ்திரேலியாவின் அனபெல் சதர்லேண்ட் ஒரு இடம் முன்னேறி இரண்டாம் இடத்தையும், இங்கிலாந்தின் லாரன் பெல் இரண்டு இடங்கள் முன்னேறி 4ஆம் இடத்தையும், வெஸ்ட் இண்டீஸின் அஃபி ஃபிளெட்சர் இரண்டு இடங்கள் முன்னேறி 10ஆவது இடத்தையும், ஆஸ்திரேலியாவின் மேகன் ஷாட் ஒரு இடம் முன்னேறி 12ஆம் இடத்தையும் பிடித்துள்ளனர். 

Also Read: LIVE Cricket Score

இதுதவிர்த்து ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசையில் வெஸ்ட் இண்டீஸீன் ஹீலி மேத்யூஸ் முதலிடத்திலும், நியூசிலாந்தின் அமெலியா கெர் இரண்டாம் இடத்திலும், இந்திய அணியின் தீப்தி சர்மா மூன்றாம் இடத்திலும் தொடர்கின்றனர். இந்த பட்டியலில் தென் ஆப்பிரிக்க வீராங்கனை நதின் டி கிளார்க் ஒரு இடம் முன்னேறி 10அம் இடத்தையும், சுனே லூஸ் 9 இடங்கள் முன்னேறி 31ஆவது இடத்தையும் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை