அடுத்த ஆண்டு வலுவாக மீண்டு வருவோம் - ஸ்மிருதி மந்தனா!
ஆடவர் ஐபிஎல் தொடரைப் போன்று இந்த ஆண்டு முதல் மகளிருக்கான பிரீமியர் லீக் தொடர் தொடங்கப்பட்டது. கடந்த 4 ஆம் தேதி மிக பிரமாண்டமாக தொடங்கப்பட்ட இந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, யுபி வாரியர்ஸ், குஜராத் ஜெயிண்ட்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் என்று 5 அணிகள் பங்கேற்றன. மிகவும் பரபரப்பாக சென்ற மகளிர் பிரீமியர் லீக் தொடர் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது.
5 அணிகள் இடம் பெற்ற இந்த தொடரில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா 2 முறை மோதின. அந்த கையில், 8 போட்டிகளில் விளையாடிய ஆர்சிபி அணி 2 போட்டிகளில் மட்டும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 4ஆவது இடம் பிடித்தது. இதே போன்று குஜராத் ஜெயிண்ட்ஸ் அணியும் 2 போட்டிகளில் வெற்றி பெற்று கடைசி இடம் பிடித்தது. இந்த இரு அணிகளும் தொடரிலிருந்து வெளியேறிய நிலையில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
2ஆவது மற்றும் 3ஆவது இடத்தில் இருக்கும் மும்பை இந்தியன்ஸ் மற்றும் யுபி வாரியஸ் அணி வரும் 24 ஆம் தேதி நடக்கவுள்ள எலிமினேட்டர் சுற்றில் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டியில் டெல்லி அணியுடன் மோதும். தோல்வி அடையும் அணி வெளியேறியும். அந்த வகையில், தொடர்ந்து 5 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்த மும்பை இந்தியன்ஸ் 6ஆவது போட்டியில் தோல்வி அடைந்தது. 7ஆவது போட்டியில் தோல்வி அடைந்து, 8ஆவது போட்டியில் வெற்றி பெற்றது. புள்ளி பட்டியலை வைத்து கணக்கிடும் போது எலிமினேட்டர் போட்டியில் யுபி வாரியர்ஸ் அணி தான் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், இந்த தொடரிலிருந்து வெளியேறிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா கூறுகையில், “எங்களிடம் ஒரு சிறந்த அணி உள்ளது. எங்களிடம் சமநிலையான அணி உள்ளது. நாங்கள் சிறப்பாக செயல்படாததால் எங்களிடம் சிறந்த அணி இல்லை என்று சொல்ல மாட்டோம். எங்களிடம் சில அற்புதமான வீரர்கள் இருந்தனர். முதல் நான்கு-ஐந்து போட்டிகள் எங்கள் வழியில் செல்லவில்லை. இந்த தொடரில் எனது பங்களிப்பு போதுமானதாக இல்லை. எங்களுக்கு சிறப்பான தொடக்கங்கள் கிடைக்கவில்லை. சில நேரங்களில் திட்டமிட்டபடி விஷயங்கள் நடக்காது. அடுத்த சீசனில் வலுவாக மீண்டு வருவோம்” என்று கூறியுள்ளார்.