கேப்டன்சி பொறுப்பு அளிக்காததற்கு காரணம் என்ன - மௌனம் கலைத்த யுவராஜ் சிங்!
சச்சின், கங்குலி, டிராவிட் ஆகியோர் ஆதிக்கம் செலுத்திய காலத்தில் இந்திய அணியின் இளம் வீரராக வலம் வந்து பின்னர், அதிரடி நாயகனாக உருவெடுத்தவர் இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங். 2007 டி20 உலக கோப்பையையும் 2011 ஒரு நாள் உலக கோப்பையையும் இந்திய அணி வெல்வதற்கு முக்கிய பங்காற்றியவர் யுவராஜ் சிங்.
ஆனால், இந்திய அணியின் கேப்டனாக அவரால் வர முடியவில்லை. 2007 டி20 உலக கோப்பையில் அவருக்கு பதில் தோனி கேப்டனாக தேர்வு செய்யப்பட்டது குறித்து அவர் மனம் திறந்து பேசியுள்ளார்.
இந்திய அணியின் பயிற்சியாளராக கிரேக் சாப்பல் பதவி வகித்தபோது பல சர்ச்சைகள் வெடித்தன. அப்போது, சச்சின் சார்பாக தான் இருந்ததாகவும் எனவே, சில பிசிசிஐ அலுவலர்கள் தன்னை கேப்டனாக்குவதை விரும்பவில்லை என்றும் யுவராஜ் கூறியுள்ளார்.
கடந்த 2005 முதல் 2007 வரை, இந்திய அணியின் பயிற்சியாளராக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் கிரேக் சாப்பல் பதவி வகித்தார். அந்த சமயத்தில், சச்சின், கங்குலி போன்ற மூத்த வீரர்களுக்கும் கிரேக் சாப்பலுக்கும் சுமூக உறவு இருக்கவில்லை.
“எங்கள் அணியை சேப்பல் கையாளும் விதத்தில் பல மூத்த வீரர்கள் உடன்படவில்லை. உலகக் கோப்பைக்கு ஒரு மாதத்திற்கு முன்பு, அவர் பேட்டிங் வரிசையில் கடுமையான மாற்றங்களைச் செய்தார், இது அணியில் உள்ள அனைவரையும் பாதித்தது" என 'சச்சின்: எ பில்லியன் ட்ரீம்ஸ்' திரைப்படத்தில், சச்சினே விவரித்திருப்பார்.
சாப்பலின் பல முடிவுகள் இந்திய அணியின் வீரர்களுக்கு அசெளகரியத்தை அளித்தது. இப்பிரச்னையில், தான் எடுத்த முடிவுதான், கேப்டன்சி பொறுப்பு தனக்கு வராததற்கு காரணம் என யுவராஜ் சிங் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் சஞ்சய் மஞ்ச்ரேக்கருக்கு அளித்த நேர்காணலில், "நான் கேப்டனாக இருந்திருக்க வேண்டும். அப்போது கிரெக் சேப்பல் சம்பவம் நடந்தது. சேப்பல் பக்கமா அல்லது சச்சின் பக்கமா என்றாகிவிட்டது. சச்சினுக்கு ஆதரவு அளித்த ஒரே வீரர் நான்தான்.
பிசிசிஐ அலுவலர்கள் சிலருக்கு அது பிடிக்கவில்லை. யாரை வேண்டினாலும் கேப்டனாக்கலாம். ஆனால், என்னை கேப்டனாக நியமிக்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டது. அது எவ்வளவு உண்மை என்று எனக்குத் தெரியவில்லை. துணை கேப்டன் பதவியில் இருந்து திடீரென நான் நீக்கப்பட்டேன்" என்று தெரிவித்தார்.