கோலியா? வில்லியம்சன்னா? என தொடங்கி வார்த்தை போர் புரியும் முன்னாள் வீரர்கள்!
இங்கிலாந்தில் வரும் ஜூன்18ம் தேதி இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடக்கிறது.
இந்த தொடரில் விராட் கோலி பெரியாளா? அல்லது வில்லியம்சன் பெரியாளா? என்ற விவாதம் தொடங்கியுள்ளது. அதில் மைக்கேல் வாகன் தெரிவித்த கருத்துதான் தற்போது பூதாகரமாகியுள்ளது.
நியூசிலாந்து பத்திரிகைக்கு பேட்டியளித்த வாகன், விராட் கோலிக்கு சமூக வலைதளங்களில் அதிக ஃபாலோவர்கள் மற்றும் அதிக லைக்குகள் கிடைப்பதால் தான் உலகின் தலைசிறந்த வீரராக பார்க்கப்படுகிறார். கேன் வில்லியம்சனுக்கு அவ்வளவு ரசிகர்கள் இல்லை என்றாலும் விராட் கோலிக்கு சமமானவர் தான். அவர் தான் இந்த போட்டியில் அதிக ரன்கள் அடிப்பார் என தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த இருந்த பாகிஸ்தான் முன்னாள் வீரர் சல்மான் பட், விராட் கோலி திறமையால் தான் சிறந்த வீரராக உள்ளார். சர்வதேச போட்டிகளில் அவர் 70 சதங்கள் அடித்துள்ளார். இன்றைய காலக்கட்டத்தில் யாரும் அதனை செய்ததில்லை. கோலியை பற்றி வாகன் ஒப்பிடுவது பயனற்ற ஒன்று. ஏனென்றால் இங்கிலாந்து அணியின் ஓப்பனராக களமிறங்கும் அவர் ஒருநாள் போட்டிகளில் ஒரு சதம் கூட அடித்ததில்லை. நேரம் போகவில்லை என்றால் இப்படி எதையாவது கிளப்பி விடுகிறார்கள் என கூறியிருந்தார்
இந்நிலையில் இதற்கு பதிலளித்துள்ள வாகன், “இதன் தலைப்பு என்ன என்று எனக்கு எதுவும் தெரியவில்லை. ஆனால் ஒன்றும் மட்டும் தெரிகிறது. பட் என்னை குறித்து ஏதோ சொல்லியுள்ளார். அது அவருடைய கருத்து. அதை நான் வரவேற்கிறேன். அதே நேரத்தில் 2010இல் சூதாட்ட புகாரில் சிக்கியது சல்மான் பட்டுக்கு நன்றாக நினைவிருக்கும்” என சொல்லி இருந்தார் வாகன்.
இதற்கு பதிலடி கொடுத்துள்ள சல்மான் பட்“அவர் தேர்ந்தெடுத்த தலைப்பு தவறானது. அதை தான் சுட்டி காட்டினேன். சிலருக்கு மூளையிலும் சிக்கல் இருக்கலாம். அதனால் அவர்கள் கடந்த காலத்திலேயே வாழ்ந்து கொண்டிருக்கலாம். கோலி, வில்லியம்சன் இருவரும் சிறந்த வீரர்கள்தான். குறைந்தபட்சம் புள்ளிவிவரங்களை வெளியிட்டாவது அவர் ஒப்பிட்டு பேசி இருக்கலாம். அதன் மூலமும் நாமும் ஏதேனும் கொஞ்சம் தெரிந்து கொண்டிருக்கலாம். ஆனால் வெறுமனே பேசி விட்டார். இப்படி பேசுவது மிகவும் தரம் தாழ்ந்து உள்ளது” என பதிலடி கொடுத்துள்ளார்.
விராட் கோலி - கேன் வில்லியம்சன் குறித்து ஒப்பீடு செய்ய தொடங்கி தற்போது முன்னாள் வீரர்களுக்கு இடையே கடும் சண்டை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மேட்ச் ஃபிக்ஸிங் உள்ளிட்ட தனிப்பட்ட தாக்குதலில் அவர்கள் இறங்கிவிட்டனர். ஆனால் இந்த விவகாரத்தில் இன்னும் விராட் கோலி மற்றும் வில்லியம்சன் இருவரும் வாய் திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.