ஒரு அணியாக நாங்கள் சரியாக செயல்படவில்லை - சஞ்சு சாம்சன்!
அஸ்ஸாம் மாநிலம் கௌகாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தது. இதனால் 20 ஓவர்கள் முடிவிக் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்களை மட்டுமே சேர்த்தது. பஞ்சாப் கிங்ஸ் அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய கேப்டன் சாம் கரண், ஹர்ஷல் படேல், ராகுல் சஹார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணியிலும் டாப் ஆர்டர் வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். ஆனாலும் இப்போட்டியில் கேப்டன் இன்னிங்ஸ் விளையாடிய சாம் கரண் அரைசதம் கடந்ததுடன் இறுதிவரை விக்கெட்டை இழக்காமல் 5 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 63 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி 18.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது. இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சாம் கரண் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இதன்மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக நான்காவது தோல்வியைத் தழுவியுள்ளது. இந்நிலையில் இத்தோல்வி குறித்து பேசிய ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன், “இன்றைய போட்டியில் நாங்கள் 10-15 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம். இது 160 ரன்களுக்கான ஆடுகளம். நன்றாக விளையாடியிருந்தால் நாங்கள் 160 ரன்களை தாண்டியிருப்போம். ஆனால் நாங்கள் ரன்களைச் சேர்க்க தவறியதன் காரணமாகவே தோல்வியை சந்தித்தோம். நான் 5 சிறப்பான பந்துவீச்சாளர்களையே பயன்படுத்தி பழக்கப்பட்டுவிட்டேன்.
தொடர்ந்து 4 போட்டிகளில் தோல்வியுற்றுள்ளோம் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஒரு அணியாக நாங்கள் சரியாக செயல்படவில்லை. எங்கள் அணியில் அதிகமான ஆட்ட நாயகர்கள் இருக்கிறார்கள். இந்த மாதிரி நேரங்களில் அவர்களில் யாராவது ஒருவர் தான் இருக்கிறேன் என்று செய்துகாட்ட வேண்டும். இதுதான் நமது திறனை காட்டுவதற்கான சரியான நேரம். 200க்கும் அதிகமான ரன்களை அடித்தே பழகிவிட்டோம். இதுமாதிரியான ஆடுகளத்தில் பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாட வேண்டும். 160-170 ரன்கள் எடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அடுத்த போட்டிகளில் எங்களுக்கு சாதமாக அமையும் என நம்புகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.