டிஎன்பிஎல் 2025: ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய சோனு யாதவ்- காணொளி

Updated: Sun, Jun 08 2025 11:10 IST
Image Source: Google

டிஎன்பிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியை பதிவுசெய்தது. இந்த போட்டியில் நெல்லை அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய சோனு யாதவ் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். 

அதன்படி இன்னிங்ஸின் கடைசி ஓவரை சோனு யாதவ் வீசிய நிலையில், அந்த ஓவரின் மூன்றாவது பந்தை எதிர்கொண்ட முகிலேஷ் பெரிய ஷாட்டை விளையாட முயற்சித்தார். ஆனால் பந்து அவர் எதிர்பார்த்ததை விட ஸ்லோவராக இருந்ததன் காரணமாக முகிலேஷ் பந்தை முழுமையாக தவறவிட்டு க்ளீன் போல்டாகினார். அதன்பின் களமிறங்கிய சரவண குமாரும் டீப் கவர் திசையை நோக்கி பவுண்டரி அடிக்க முயற்சித்து அருண் கார்த்திக்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து ஓவரின் 5ஆவது பந்தை எதிர்கொண்ட கௌஷிக்கும் டீப் மிட் விக்கெட் திசையில் பவுண்டரி அடிக்க முயற்சித்து தூக்கி அடிக்க அத்திசையில் ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த ஹரிஷ் கேட்ச் பிடித்தார். இதன் மூலம் சோனு யாதவ் தனது ஹாட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியதுடன் சில சாதனைகளையும் படைத்துள்ளார். அந்தவகையில் நடப்பு டிஎன்பிஎல் தொடரில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் எனும் பெருமையைப் பெற்றுள்ளார். 

அதேசமயம் டிஎன்பிஎல் தொடர் வரலாற்றில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய 6ஆவது வீரர் எனும் சாதனையையும் சோனு யாதவ் படைத்துள்ளார். இதற்குமுன், எம் கே சிவக்குமார், ஈஸ்வரன் உள்ளிட்டோர் டிஎன்பிஎல் தொடரில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நெல்லை ராயல் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் சோனு யாதவ் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய காணொளி வைரலாகி வருகிறது. 

இப்போட்டி குறித்து பேசினால், டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த நெல்லை திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்களைச் சேர்த்தது. அந்த அணியில் அதிகபட்சமாக வசீம் அஹ்மத் 41ரன்களையும், ஜாஃபர் ஜமால் 39 ரன்களையும், ராஜ்குமார் 30 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் ரன்களைச் சேர்க்க தவறினர். ராயல் கிங்ஸ் தரப்பில் சோனு யாதவ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

Also Read: LIVE Cricket Score

இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ராயல் கிங்ஸ் அணியில் கேப்டன் அருண் கார்த்திக் 41 ரன்களையும், சந்தோஷ் குமார் 45 ரன்களையும் சேர்க்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த என்எஸ் ஹரிஷ் 35 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் நெல்லை ராயல் கிங்ஸ் அணி 19.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை