WI vs SA: டி20 தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு; இளம் வீரர்களுக்கு வாய்ப்பு!

Updated: Wed, Aug 14 2024 15:57 IST
Image Source: Google

வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்துவரும் தென் ஆப்பிரிக்க அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடிவருகிறது. இதில் தற்போது நடைபெற்றுவரும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் டிராவில் முடிவடைந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது நாளை கயானாவில் தொடங்கவுள்ளது. 

இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது ஆகஸ்ட் 24ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் 15 பேர் அடங்கிய தென் ஆப்பிரிக்க டி20 அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. இன்று அறிவிக்கப்பட்டுள்ள அணியில் டேவிட் மில்லர், குயின்டன் டி காக், காகிசோ ரபாடா, கேசவ் மஹாராஜ் மற்றும் தப்ரைஸ் ஷம்ஸி உள்ளிட்டோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக இவர்கள் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் விளையாடினர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், காயம் மற்றும் பணிச்சுமை காரணமாக இவர்களுக்கு இத்தொடரில் ஓய்வளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேசமயம் ஜேசன் ஸ்மித் மற்றும் அண்டர்19 உலகக்கோப்பை தொடரில் அசத்திய குவேனா மபாகா உள்ளிட்ட அறிமுக வீரர்களுக்கு இத்தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

மேற்கொண்ட ஐடன் மார்க்ரம் தலைமையிலான இந்த டி20 அணியில் ரஸ்ஸி வேண்டர் டுசென், ரியான் ரிக்கெல்டன், லுங்கி இங்கிடி, நந்த்ரே பர்கர், லிசாத் வில்லியம்ஸ் உள்ளிட்டோருக்கு அணியில் இடம் கிடைத்துள்ளது. இருப்பினும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இடம்பிடித்திருந்த நட்சத்திர வீரர்கள் இத்தொடரில் பங்கேற்காதது தென் ஆப்பிரிக்க அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தென் ஆப்பிரிக்க டி20 அணி: ஐடன் மார்க்ரம் (கே), ஒட்னீல் பார்ட்மேன், நந்த்ரே பர்கர், டோனவன் ஃபெரீரா, ஜார்ன் ஃபோர்டுயின், ரீசா ஹென்ட்ரிக்ஸ், பேட்ரிக் க்ரூகர், குவேனா மபாகா, வியான் முல்டர், லுங்கி இங்கிடி, ரியான் ரிக்கெல்டன், ஜேசன் ஸ்மித், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ரஸ்ஸி வான் டெர் டுசென், லிசாத் வில்லியம்ஸ்.

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்கா டி20 தொடர்

  • ஆகஸ்ட் 24 - முதல் டி20 - டிரினிடாட்
  • ஆகஸ்ட் 25 - இரண்டாவது டி20, டிரினிடாட்
  • ஆகஸ்ட் 28 - மூன்றாவது டி20, டிரினிடாட்
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை