SA vs WI, 1st test: விண்டீஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது தென் ஆப்பிரிக்கா!

Updated: Thu, Mar 02 2023 20:25 IST
South Africa beat West Indies by 87 runs in the first test to go 1-0 up in the series!
Image Source: Google

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் பிப்ரவரி 28ஆம் தேதி தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.

அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி ஐடன் மார்க்ரமின் அபார சதத்தின் மூலம் முதல்நாள் ஆட்டநேர முடிவில், 8 விக்கெட் இழப்பிற்கு 314 ரன்களைச் சேர்த்தது. இதையடுத்து நேற்று நடைபெற்ற இரண்டாம் நாள் ஆட்டத்தில்,  தென் ஆப்பிரிக்க அணி 342 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து முதல் இன்னிங்ஸை முடித்தது. வெஸ்ட் இண்டிஸ் தரப்பில் சிறப்பாக பந்துவீசிய அல்ஸாரி ஜோசப் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் தொடக்க வீரர்கள் கேப்டன் பிராத்வைத் 11 ரன்களிலும், சந்தர்பால் 22 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த ரெய்ஃபெர் - பிளாக்வுட் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். இதில் ரெய்ஃபர் அரைசதம் கடந்தார். 

அதன்பின் 37 ரன்களில் பிளாக்வுட் ஆட்டமிழக்க, 62 ரன்களில் ரெய்ஃபரும் விக்கெட்டை இழந்தார். அதன்பின் வந்த வீரர்களும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்ப வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸில் 212 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தென் ஆப்பிரிக்க தரப்பில் ஆன்ரிச் நோர்ட்ஜே 5 விக்கெட்டுகளையும், ரபாடா, கோட்ஸி தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

அதன்பின் நேற்றைய நாளின் கடைசி ஷெசனில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் ஐடன் மார்க்ரம் ஒருமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வர மறுமுனையில் களமிறங்கிய டீன் எல்கர், ஸொர்ஸி, டெம்பா பவுமா, கீகன் பீட்டர்சென் ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். 

இதனால் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 49 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது. அதன்பின் இன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தை மார்க்ரம் 35 ரன்களுடன் தொடர்ந்தார். இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மார்க்ரம் 47 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களுக்கு அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து நடையைக் கட்டினர். 

இதனால் தென் ஆப்பிரிக்க அணி 116 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் கீமார் ரோச் 5 விக்கெட்டுகளையும், அல்ஸாரி ஜோசப், ஜேசன் ஹோல்டர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸுக்கு 247 ரன்களை இலக்காக நிர்ணயித்தது தென் ஆப்பிரிக்கா.

அதன்பின் இலக்கை நோக்கி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் பிராத்வைட் ரன்கள் ஏதுமின்றியும், சந்தர்பால் 10 ரன்களிலும், ரெய்ஃபெர் 8 ரன்களிலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அதன்பின் களமிறங்கிய பிளாக்வுட் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்தார். ஆனால் மறுமுனையில் களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, 79 ரன்களைச் சேர்த்த பிளாக்வுட்டும் ஆட்டமிழந்தார். 

இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 159 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. தென் ஆப்பிரிக்க தரப்பில் காகிசோ ரபாடா 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை