SA vs WI, 2nd Test: சதமடித்து கம்பேக் கொடுத்த பவுமா; வலிமையான நிலையில் தென் ஆப்பிரிக்கா!
தென் ஆப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 2ஆவது டெஸ்ட் ஜோஹன்னஸ்பர்க்கில் நடந்து வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதல் இன்னிங்சில் தென் ஆப்ரிக்கா 320 ரன்களையும், அதனைத்தொடர்ந்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் 251 ரன் எடுத்தன.
இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த தென் ஆப்பிரிக்க அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 4 ரன்களை எடுத்திருந்தது. இதில் மார்க்ரம் ஒரு ரன்னுடனும், டீன் எல்கர் 3 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
அதன்பின் நடைபெற்ற மூன்றாம் நாள் ஆட்டத்தில் தென் ஆப்ரிக்க அணிக்கு டீன் எல்கர் (5), டோனி டி ஜோர்ஜி (1), மார்க்ரம் (18) ஏமாற்றினர். ரியான் ரிக்கெல்டன் (10), ஹென்ரிச் கிளாசன் (14) ஆகியோரும் நிலைக்கவில்லை.
ஆனால் கடந்த போட்டி மற்றும் கடந்த இன்னிங்ஸில் சொதப்பிய கேப்டன் டெம்பா பவுமா இந்த இன்னிங்ஸில் விஸ்வரூபமெடித்தார். டெம்பா பவுமா, வியான் முல்டர் ஜோடி விக்கெட் சரிவிலிருந்து அணியை மீட்டது. இதில் அபாரமாக விளையாடிய பவுமா சதம் விளாசினார். இந்த இணைக்கு ஆறாவது விக்கெட்டுக்கு 103 ரன் சேர்த்த போது முல்டர் (42) அவுட்டானார்.
அவரைத்தொடர்ந்து வந்த சைமன் ஹார்மரும் 19 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். ஆனாலும் மறுமுனையில் டெம்பா பவுமா தனி ஒருவனாக அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதன்மூலம் ஆட்டநேர முடிவில், தென் ஆப்ரிக்க அணி 2ஆவது இன்னிங்ஸில் 7 விக்கெட்டுக்கு 287 ரன் எடுத்து, 356 ரன் முன்னிலை பெற்றிருந்தது.
இதில் டெம்பா பவுமா 171 ரன்களுடனும், கேஷவ் மகாராஜ் 3 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அல்ஜாரி ஜோசப், கைல் மேயர்ஸ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.