இந்த போட்டியில் மிகவும் சோர்வடைந்து விட்டேன் - குயின்டன் டி காக்!
மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்று முடிந்த நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 23ஆவது லீக் போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தென் ஆப்பிரிக்க அணி 149 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி இந்த தொடரில் தங்களது நான்காவது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் நல்ல ரன்ரேட் உடன் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. அதன்படி இன்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணியானது 50 ஓவர்களின் முடிவு 5 விக்கெட்டுகளை இழந்து 382 குவித்தது.
பின்னர் 383 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய வங்கதேச அணியானது 46.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 233 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் காரணமாக தென் ஆப்பிரிக்க அணி 149 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டியின் போது தென் ஆப்பிரிக்க அணியின் ரன் குவிப்பை இமாலய இலக்கிற்கு எடுத்துச் சென்ற அந்த அணியின் துவக்க வீரரான குவின்டன் டி காக் 140 பந்துகளை சந்தித்து 15 பவுண்டரி மற்றும் 7 சிக்ஸர்கள் என அசத்தலான பேட்டிங்கை வெளிப்படுத்தி 174 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
அவரது இந்த சிறப்பான பேட்டி காரணமாக அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் போட்டி முடிந்து பேசிய குயின்டன் டி காக், “உண்மையாக சொல்ல வேண்டுமென்றால் நான் இந்த போட்டியில் மிகவும் சோர்வடைந்து விட்டேன். ஆனாலும் இப்படி ஒரு சிறப்பான இன்னிங்ஸ்ஸை விளையாடியதால் எனக்கு திருப்தியாக இருந்தது. நாங்கள் அனைவருமே அவரவர்கள் துறையில் சரியாக செயல்பட்டதாக நினைக்கிறேன்.
அதன் காரணமாகவே இந்த இரண்டு புள்ளிகள் எங்களுக்கு கிடைத்துள்ளது. இந்தியாவில் நான் தொடர்ச்சியாக 50 ரன்களுக்கு மேல் அடித்தால் சதம் அடிக்கிறேன். அது எப்படி என்று எனக்கு தெரியவில்லை இருந்தாலும் நடக்கிறது. இன்று காலை சிறிது பதட்டத்துடன் இருந்தேன் ஆனால் இன்று நாங்கள் விளையாடி விதம் உண்மையிலேயே எங்களுக்கு சிறந்த நாளாக அமைந்தது. இறுதியில் நாங்கள் இந்த இரண்டு புள்ளிகளை பெற்றதில் மிகவும் மகிழ்ச்சி.
கிளாஸன் உண்மையிலேயே ஒரு அற்புதமான வீரர். நான் அவர் பருகும் பழச்சாறை கொஞ்சம் பருக வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அந்த அளவிற்கு அவர் பவரோடு பந்தை விளாசுகிறார். எங்கள் அணியில் மட்டுமல்ல உலகெங்கிலும் உள்ள பிளேயர்களில் அவர் மிகவும் வலிமையான வீரராக இருக்கிறார். உண்மையிலேயே அவர் புயல் மாதிரி அதிவேகமாக விளையாடுகிறார். அவரின் ஆட்டத்தை நினைத்தால் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது” என கூறியுள்ளார்.