SA vs WI, 3rd ODI: கிளாசென் சதத்தால் தொடரை சமன் செய்தது தென் ஆப்பிரிக்கா!

Updated: Tue, Mar 21 2023 21:27 IST
South Africa win the third and final ODI to level the series after Heinrich Klaasen's outstanding kn (Image Source: Google)

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வரும் வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போது 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. இதைத்தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டிஸ் அணி வெற்றி பெற்று, ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றது. 

இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் தென் ஆப்பிரிக்கா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி போட்செஃப்ஸ்ட்ரூமில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் கைல் மேயர்ஸ் 14, ஷமாரா ப்ரூக்ஸ் 18 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். இருப்பினும் மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த மற்றொரு தொடக்க வீரர் பிராண்டன் கிங் அரைசதம் கடந்து அசத்தினார். தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வந்த கிங் 72 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். 

அவரைத்தொடர்ந்து கடந்த போட்டியில் சதமடித்திருந்த கேப்டன் ஷாய் ஹோப் 16 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் வந்த ரோவ்மன் பாவெலும் 2 ரன்னுக்கு விக்கெட்டை இழந்தனார். அதன்பின் ஜோடி சேர்ந்த நிக்கோலஸ் பூரன் - ஜேசன் ஹோல்டர் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தி 200 ரன்களை கடக்க செய்தனர். 

பின் பூரன் 39 ரன்களிலும், ஹோல்டர் 36 ரன்களிலும் ஆட்டமிழக்க, அடுத்து வந்த வீரர்களும் போதிய ரன்களைச் சேர்க்க தவறினர். இதனால் 48.2 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 260 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் மார்கோ ஜான்சென், ஃபோர்டுயின், ஜெரால்ட் கோட்ஸி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

அதன்பின் இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் ரியான் ரிக்கெல்டன் 3, டோனி டி ஸோர்ஸி 21, ரஸ்ஸி வெண்டர் டுசென் 14, கேப்டன் ஐடன் மார்க்ரம் 25 ரன்கள் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதையடுத்து களமிறங்கிய ஹெண்ட்ரிச் கிளாசென் ஒருபக்கம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுமுனையில் களமிறங்கிய டேவிட் மில்லரும் 17 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார்.

இதையடுத்து கிளாசெனுடன் இணைந்த மார்கோ ஜான்செனும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹென்ரிச் கிளாசென் தனது சதத்தை பதிவுசெய்து அசத்தினார். மறுமுனையில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மார்கோ ஜான்சென் 5 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 43 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். 

இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த ஹென்ரிச் கிளாசென் 61 பந்துகளில் 15 பவுண்டரி 5 சிக்சர்கள் என 119 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியை தேடித்தந்தார். இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 29.3 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன், 4 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி வெற்றிபெற்றது. 

இந்த வெற்றியின் மூலம் தென் ஆப்பிரிக்க அணி 1-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை சமன்செய்துள்ளது. மேலும் இப்போட்டியில் சதமடித்த கிளாசென் ஆட்டநாயகனாகவும், வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஷாய் ஹோப் மற்றும் கிளாசென் இருவருக்கும் தொடர் நாயகன் விருது பகிர்ந்தளிக்கப்பட்டது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை