சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விளையாடியது குறித்து மனம் திறந்த வருண் சக்ரவர்த்தி!

Updated: Tue, Mar 11 2025 22:33 IST
Image Source: Google

ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில்  ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் மூன்றாவது முறையாக இந்திய அணி சாம்பியன்ஸ் கோப்பை தொடரை வென்று அசத்தியுள்ளது. 

இத்தொடரில் இந்திய அணிக்காக விளையாடிய வருண் சக்ரவர்த்தி தனது அபாரமான பந்துவீச்சின் மூலம் எதிரணி பேட்டர்களை தடுமாறச் செய்தார். அதிலும் குறிப்பாக இத்தொடரில் மூன்று போட்டிகளில் மட்டுமே விளையாடிய வருண், ஒரு ஐந்து விக்கெட் ஹால் உள்பட 9 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். முன்னதாக இவர் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பெறவில்லை. 

ஏனெனில் முதலில் அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு தான் வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. அதேசமயம் வருண் சக்ரவர்த்தி இங்கிலாந்து டி20 தொடருக்கான இந்திய அணியில் மட்டும் இடம்பிடித்திருந்தார். அப்போது டி20 தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அவர் அத்தொடரின் தொடர் நாயகன் விருதையும் கைப்பற்றி அசத்தினார். அதேசமயம் ஜஸ்பிரித் பும்ராவும் காயம் காரணமாக சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இருந்து விலகினார். 

இதனால் அவருக்கு பதிலாக இந்திய ஒருநாள் அணியில் வருண் சக்ரவர்த்திக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இருப்பினும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் முதலிரண்டு லீக் ஆட்டங்களில் வருண் சக்ரவர்த்திக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஆனால் அதன்பின் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியின் மூலம் லெவனில் வாய்ப்பு பெற்ற வருண், அந்த போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், தனது இடத்தையும் அணியில் உறுதிசெய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் இதுகுறித்து பேசிய வருண் சக்ரவர்த்தி, “இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர் முடியும்போது நான் வீட்டிற்கு செல்ல இருந்தேன், ஆனால் அப்போது நான் ஒருநாள் தொடரிலும் விளையாட வேண்டும் என்ற செய்தி கிடைத்தது. பின் ஒருநாள் தொடர் முடிந்து வீடு திரும்பலாம் என எண்ணும் போது சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விளையாட துபாய் செல்ல போகிறோம் என்றனர். இப்போது கோப்பையை வென்றுவிட்டோம். மிகவும் சந்தோஷமாக இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார். 

Also Read: Funding To Save Test Cricket

இந்திய அணிக்காக இதுவரை 4 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையடையுள்ள வருண் சக்ரவர்த்தி 10 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். அதேசமயம் டி20 கிரிக்கெட்டை பொறுத்தவரையில் இந்திய அணிக்காக 18 போட்டிகளில் விளையாடி 33 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். இதுதவிர்த்து ஐபிஎல் தொடரில் 71 போட்டிகளில் விளையாடிவுள்ள வருண் சக்ரவர்த்தி 83 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை