இங்கிலாந்து வீரர்களைத் தொடர்ந்து ஐபிஎல் தொடரை புறக்கணிக்க தயாராகும் மற்றொரு அணி; பிசிசிஐ-க்கு தொடரும் சிக்கல்!
கரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள ஐபிஎல் தொடர் இந்தாண்டு டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக நடத்தப்படலாம் என பேசப்பட்டு வருகிறது. ஆனால் உலகக்கோப்பைக்கு தயாராகும் வெளிநாட்டு வீரர்கள் இதில் பங்கேற்பதில் தற்போது சிக்கல் எழுந்துள்ளது.
இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் இயக்குநர் ஆஸ்லே கில்ஸ் சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் இங்கிலாந்து அணி வீரர்கள் அனைவரும் ஐபிஎல்-ஐ புறம் தள்ளிவிட்டு சொந்த நாட்டிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்தார். இது மறைமுகமாக வீரர்களுக்கு ஐபிஎல்-ல் பங்கேற்க கூடாது என அழுத்தம் கொடுத்தது.
இந்த அதிர்ச்சி செய்தியின் தாக்கம் பிசிசிஐயிடம் குறையாத நிலையில் தற்போது மேலும் ஒரு அதிர்ச்சி வந்துள்ளது. ஐபிஎல் தொடர் செப்டம்பர் மாதம் நடத்தப்பட்டால் நியூசிலாந்து வீரர்கள் கலந்துக்கொள்ள மாட்டார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
ஏனென்றால் நியூசிலாந்து அணி வரும் செப்டம்பர் மாதத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடவுள்ளது. இந்த போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது.
டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. அந்த வகையில் நியூசிலாந்து அணிக்கு உலகக் கோப்பைக்கு முன்னதாக நடைபெறும் கடைசி சர்வதேச டி20 போட்டி இதுவே ஆகும். இதனால் இதனை ஒத்திவைக்கவோ, ரத்து செய்யும் முடிவுக்கோ கண்டிப்பாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் முன் வராது.
நியூசிலாந்து வீரர்கள் இல்லாமல் பெரிதும் சிரமப்படும் அணிகளாக மும்பை, ஹைதராபாத் அணிகள் உள்ளன. ஏனென்றால் ஹைதராபாத் அணியின் கேப்டனாக வில்லியம்சன் உள்ளார். அதே போல மும்பை அணியில் ட்ரெண்ட் போல்ட் உள்ளார். இதை தவிர, ஆடம் மில்ன் ( மும்பை), மிட்சல் சாண்ட்னர் (சிஎஸ்கே), ஃபெர்குசன் (கொல்கத்தா), டிம் செர்ஃபெர்ட் ( கொல்கத்தா), ஃபின் ஆலன் ( ஆர்சிபி), கெயில் ஜேமிசன் ( ஆர்சிபி), ஆகியோரும் நடப்பு ஐபிஎல் தொடரில் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது