தோல்வியிலிருந்து நாங்கள் சில பாடங்களை கற்றுக் கொண்டுள்ளோம் - ஐடன் மார்க்ரம்!
16ஆவது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 47ஆவது லீக் போட்டியானது நேற்று இரவு ஹைதராபாத் நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் ஐடன் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசஸ் அணியும், நித்திஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி முதலில் விளையாடிய கொல்கத்தாணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் குவித்தது. கொல்கத்தா அணி சார்பாக ரிங்கு சிங் 46 ரன்களையும், நித்திஷ் ராணா 42 ரன்களையும் குவித்து அசத்தினர்.பின்னர் 172 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சன்ரைசர்ஸ் அணியானது 20 ஓவர்களின் முடிவில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் மட்டுமே குவித்ததால் ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் இந்த போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது.
இந்நிலையில் எளிதாக வெற்றி பெற்றிருக்க வேண்டிய இந்த போட்டியில் தோல்வியை சந்தித்தது குறித்து பேசிய சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் எய்டன் மார்க்ரம், “இந்த போட்டியின் கடைசி கட்டத்தில் விளையாடுவது உண்மையிலேயே கடினமாக இருந்தது. கடைசி கட்டத்தில் நாங்கள் தவறான ஷாட்டுகளை விளையாடிவிட்டோம். கிளாசன் அருமையாக பேட்டிங் செய்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து வந்தார். ஆனாலும் போட்டியை வெற்றிகரமாக என்னால் முடிக்க முடியவில்லை.
பந்துவீச்சில் இன்று எங்களது அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாகவே தங்களது பணியை செய்து இருந்தனர். ஆனால் பீல்டிங்கில் நாங்கள் ஒரு சில தவறுகளை செய்து விட்டோம். அதேபோன்று பேட்டிங்கிலும் துவக்கத்தில் நான் ரன் குவிக்க கஷ்டப்பட்டேன் இறுதியில் நாங்கள் சில ரன்கள் வித்தியாசத்தில் தோற்க அதுவே காரணமாக அமைந்துவிட்டது. இந்த தோல்வியிலிருந்து நாங்கள் சில பாடங்களை கற்றுக் கொண்டுள்ளோம். எங்களுடைய திட்டங்களை சரியாக வெளிப்படுத்த முடியவில்லை. நிச்சயம் இந்த சரிவிலிருந்து மீண்டு வெற்றி பாதைக்கு திரும்புவோம்” என்று கூறியுள்ளார்,