விராட் கோலிக்கு நான் ஏன் வாழ்த்து தெரிவிக்க வேண்டும் - குசால் மெண்டிஸ் காட்டம்!

Updated: Mon, Nov 06 2023 14:32 IST
Image Source: Google

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 243 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இந்த போட்டியில் முதல் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 326 ரன்கள் சேர்த்தது. சிறப்பாக ஆடிய இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 101 ரன்களை விளாசினார்.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி வெறும் 83 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இந்திய அணி தரப்பில் நட்சத்திர வீரர் ஜடேஜா 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதன் மூலம் உலகக்கோப்பை லீக் சுற்றில் இந்திய அணி முதலிடத்தில் முடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த போட்டியின் ஆட்டநாயகனாக சதம் விளாசிய விராட் கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் விராட் கோலிக்கு இது 49ஆவது சதமாகும். இதன் மூலம் சச்சின் டெண்டுல்கரின் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்களை விளாசிய வீரர் என்ற சாதனையை சமன் செய்துள்ளார். சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்த விராட் கோலிக்கு, சச்சின் உட்பட பல்வேறு ஜாம்பவான் வீரர்களும் வாழ்த்து தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று மாலை டெல்லியில் இலங்கை அணி கேப்டன் குசல் மெண்டிஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பத்திரிகையார்கள் விராட் கோலி 49ஆவது சதத்தை பூர்த்தி செய்துள்ளார். அவருக்கு நீங்கள் வாழ்த்து கூற விரும்புகிறீர்களா? என்று கேள்வி எழுப்பினர். இதனால் கோபமடைந்த குசல் மெண்டிஸ், நான் எதற்காக விராட் கோலிக்கு வாழ்த்து கூற வேண்டும் என்று பதிலடி கொடுத்தார்.

இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த காணொளி ட்ரெண்டான நிலையில், விராட் கோலிக்கு இலங்கை அணி கேப்டன் குசல் மெண்டிஸ் ஏன் வாழ்த்து கூற வேண்டும் என்று ரசிகர்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர். கடந்த போட்டியில் இலங்கை அணியை இந்திய அணி 55 ரன்களில் ஆல் அவுட் செய்தது. ஏற்கனவே உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ள இலங்கை அணியின் கேப்டனிடம் இப்படி கேள்வி எழுப்பியிருக்க கூடாது என்று பார்க்கப்படுகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை