குணதிலகாவிற்கு ஜாமின் வழங்க ஆஸி நிதிமன்றம் மறுப்பு!
இலங்கை அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் தனுஷ்கா குணதிலகா. இவர் இலங்கை அணிக்காக இதுவரை 47 ஒருநாள் போட்டிகளிலும், 46 டி20 போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார். இந்த இரு வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்டுள்ள ஆல் ரவுண்டரான தனுஷ்கா குணதிலகா, இலங்கை அணியின் பல்வேறு வெற்றிக்கு சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ளார்.
இதனால் டி20 உலகக்கோப்பைத் தொடரில் பங்கேற்க இருந்த இலங்கை அணியில் தேர்வு செய்யப்பட்டார். இதற்காக ஆஸ்திரேலியா வந்த அவர், இலங்கை அணியுடன் தீவிர பயிற்சியில் ஈடுபட்டார். ஆனால் தொடரின் இடையே குணதிலகாவுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக தொடரில் இருந்து விலகினார். இவருக்கு பதிலாக இலங்கை அணியில் பண்டாரா சேர்க்கப்பட்டார். காயம் அடைந்தாலும் அவர் இலங்கைக்கு திரும்பாமல் அணியுடனேயே இருந்தார். இலங்கை அணிக்கு உற்சாகமளிக்கும் வகையில் அணியுடன் தொடர்ந்து பயணித்தும், வீரர்களுக்கு உதவியாகவும் இருந்தார்.
இந்த நிலையில் சிட்னியில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை அணி தோல்வியடைந்தது. இந்தப் போட்டிக்கு பின்னர் இலங்கை அணியின் தனுஷ்கா குணதிலகா சிட்னி காவல்துறையால் கைது செய்யப்பட்டார். அவர் ஏன் கைது செய்யப்பட்டார் என சிட்னி காவல்துறை கூறுகையில், இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்கா குணதிலகா டேட்டிங் ஆப் மூலம் 29 வயது பெண்ணுடன் பழகி உள்ளார். இந்த நிலையில் கடந்த 2ஆம் தேதி ரோஸ் பே நகரில் உள்ள ஒரு ஓட்டலில் இருவரும் சந்தித்துள்ளனர். அப்போது அந்த பெண்ணை குணதிலகா பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இது தொடர்பாக, அனுமதி இன்றி தன்னுடன் பாலியல் உறவு வைத்து கொண்டதாக பாதிக்கப்பட்ட பெண் சிட்னி காவல்துறையில் புகார் அளித்தார். இந்த புகார் தொடர்பாக சிட்னி காவல்துறையினர் குணதிலகாவை கைது செய்தனர். இதையடுத்து பாலியல் வழக்கில் சிக்கிய குணதிலகாவை இலங்கை கிரிக்கெட் வாரியம் சஸ்பெண்ட் செய்துள்ளது. அவர் எந்தவிதமான கிரிக்கெட்டிலும் ஆடமுடியாத படி சஸ்பெண்ட் செய்துள்ளது இலங்கை கிரிக்கெட் வாரியம். இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு, இது உண்மை என நிரூபனமானால் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட தனுஷ்கா குணதிலகா காணொளி காட்சி மூலம் சிட்னி டவுனிங் செண்டர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது தனுஷ்கா குணதிலகாவிற்கு ஜாமீன் கேட்டு மனு அளிக்கப்பட்டது. ஆனால் பாலியல் வன்கொடுமை வழக்கில் குணதிலகாவிற்கு ஜாமீன் அளிக்க மறுத்த நீதிமன்றம் அவரை சிறையில் அடைக்குமாறு உத்தரவிட்டது.
இலங்கை அணியில் திறமையான இளம் வீரர்கள் பலர் வந்துவிட்ட நிலையில், இலங்கை அணி வலுவான அணியாக செட்டாகி கொண்டிருக்கிறது. எனவே இப்படியொரு மோசமான வழக்கில் சிக்கிய தனுஷ்கா குணதிலகாவிற்கு இனிமேல் இலங்கை அணியில் இடம் கிடைக்க வாய்ப்பில்லை. அவரது கிரிக்கெட் கெரியர் இத்துடன் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது எனலாம்.