பாலியல் குற்றச்சாட்டில் இலங்கை வீரர் குணதிலகா கைது; சர்வதேச கிரிக்கெட்டில் பரபரப்பு!
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் தொடங்கிய இந்த தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இதில் குரூப் 1இல் இடம்பெற்றுள்ள இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. அதேபோல் குரூப் 2இல் உள்ள இந்தியா அணி அரையிறுதிக்கு முன்னேறிய நிலையில், அடுத்த இடத்தைப் பிடிக்க பாகிஸ்தான், வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
இவ்வாறு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஒருபுறம் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்க, மறுபுறம் இலங்கை கிரிக்கெட் வீரர் ஒருவர் பாலியல் வன்கொடுமை புகாரில் சிக்கி ஆஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இலங்கை கிரிக்கெட் அணியின் தொடக்க வீரரான தனுஷ்கா குணதிலகா பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கி சிட்னி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் காயம் காரணமாக டி20 உலகக்கோப்பைக்கான இலங்கை அணியில் இருந்து விலகிய போதும், அவரை சொந்த நாட்டுக்கு அனுப்பாமல் வைத்திருந்தனர். இந்த நிலையில் தான் அவர் மீது பெண் ஒருவர் அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில் சிட்னி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சூப்பர் 12 சுற்றுடன் வெளியேறிய இலங்கை அணி இன்று நாடு திரும்பியது. தனுஷ்க குணதிலகாவை காவல்துறையினர் கைது செய்ததால் அவரை தவிர மற்ற வீரர்கள் நாடு திரும்பினர்.
இலங்கை வீரர் தனுஷ்க குணதிலகா பாலியல் புகாரில் சிக்குவது இது முதல்முறையல்ல. இதற்கு முன்னர் கடந்த 2018ஆம் ஆண்டு நார்வே பெண் ஒருவர் அளித்த பாலியல் வன்கொடுமை புகாரிலும் சிக்கினார். ஆனால் அப்போது அவரது நண்பரையும், அவரிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இறுதியில் தனுஷ்க குணதிலகாவிற்கு அதில் தொடர்பு இல்லை என விடுவிக்கப்பட்டு, அவரது நண்பரை மட்டும் காவல்துறை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.