SL vs AFG, 3rd ODI: ஆஃப்கானை பந்தாடி தொடரை வென்றது இலங்கை!
இலங்கையில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஆஃப்கானிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதலிரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி என 1-1 என்ற கணக்கில் தொடரில் சமனிலையில் இருந்தன.
இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்து களமிறங்கியது. அதன்படி களமிறங்கிய அந்த அணியில் ரஹ்மனுல்லா குர்பாஸ் 8 ரன்களிலும், இப்ரஹிம் ஸத்ரான் 22 ரன்களிலும், ரஹ்மத் ஷா 7 ரன்களிலும், ஹஸ்மதுல்லா ஷாஹிதி 4 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர்.
அதன்பின் வந்த முகமது நபி 23 ரன்களுக்கும், நஜிபுல்லா ஸத்ரான் 10 ரன்களுக்கும், குல்புதின் நைப் 20 ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். அதனைத்தொடர்ந்து வந்த ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான் ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் 22.2 ஓவர்களிலேயே ஆஃப்கானிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 116 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இலங்கை அணி தரப்பில் துஷ்மந்தா சமீரா 4 விக்கெட்டுகளையும், வநிந்து ஹசரங்கா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதையடுத்து எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணியில் தொடக்க வீரர்கள் பதும் நிஷங்கா - திமுத் கருணரத்னே இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடக்க அணியின் வெற்றியும் உறுதியானது.
இதன்மூலம் 16 ஓவர்களில் இலங்கை அண் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து இலக்கை எட்டியதுடன், 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆஃப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2- 1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது