தில்சன் அதிரடி; இலங்கை அபார வெற்றி!
சாலைப்பாதுகாப்பு உலக சீரிஸ் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இலங்கை லெஜண்ட்ஸ் - வங்கதேச லெஜண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற வங்கதேச லெஜண்ட்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய இலங்கை லெஜண்ட்ஸ் அணிக்கு ஜெயசூர்யா - மஹேல உடவத்த இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய திலகரத்னே தில்சன் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்தார்.
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் இலங்கை லெஜண்ட்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்களைச் சேர்த்து அசத்தியது. இதில் அதிகபட்சமாக தில்சன் 51 ரன்களைச் சேர்த்திருந்தார்.
இதையடுத்து இமாலய இலக்கை துரத்திய வங்கதேச லெஜண்ட்ஸ் அணியில் அஃப்தாப் அஹ்மத் - நசிமுதின் இணை சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினர். அதன்பின் களமிறங்கிய துஷர் இம்ரான் சிறப்பாக விளையாடி அரைசதம் கடந்தார்.
ஆனால் மற்ற வீரர்களால் இலங்கை பந்துவீச்சுக்கு ஈடுக்கொடுக்க முடியாமல் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் வங்கதேச லெஜண்ட்ஸ் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்களை மட்டுமே சேர்த்தது.
இலங்கை தரப்பில் கேப்டன் திலகரத்னே தில்சன் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதன்மூலம் இலங்கை லெஜண்ட்ஸ் அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச லெஜண்ட்ஸ் அணியை வீழ்த்தி அசத்தலான வெற்றியைப் பதிவுசெய்தது.