போட்டியை வெற்றி பெற பயமில்லாமல் விளையாட வேண்டும் - குசால் பெரேரா!
இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்யவுள்ளது. இப்போட்டிகள் அனைத்தும் தாக்காவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், 16 பேர் கொண்ட இலங்கை அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்தது.
இந்த அணியில் அனுபவ வீரர்களான தினேஷ் சண்டிமல், திமுத் கருணரத்னே, ஆஞ்சலோ மேத்யூஸ் ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டு, இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் குசால் பெரேரா கேப்டனாகவும் குசால் மெண்டிஸ் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய புதிய கேப்டன் குசால் பெரேரா, கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற வேண்டுமென்றால் முதலில் பயமில்லாமல் விளையாட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், போட்டிகளில் வெற்றி பெற நாம் பயமற்ற கிரிக்கெட்டை விளையாட வேண்டும். இப்படி விளையாடினால் மட்டுமே விக்கெட் விழுவதை எண்ணி நீங்கள் பயப்பட முடியாது. உங்கள் இடத்தைப் பற்றி நீங்கள் கவலைப்படுகிறார் என்றால், நீங்கள் 100 சதவீத திறனையும் உங்களால் கொடுக்க முடியாது.
அதனால் நான் எங்கள் வீரர்களிடம் பயமற்ற கிரிக்கெட்டை விளையாட சொல்லப் போகிறேன். ஏன் எங்களது பயிற்சியிலும் கூட பயமில்லாமல் விளையாட அறிவுறுத்தியுள்ளேன். எங்கள் வீரர்களிடம் அதிக நம்பிக்கை உள்ளது. அதனால் நாங்கள் கிரிக்கெட் விளையாட்டில் மீண்டும் சரித்திரத்தை உருவாக்குவோம் என்று தெரிவித்தார்.
இலங்கை அணி: குசால் பெரேரா(கேப்டன்), குசால் மெண்டிஸ்(துணை கேப்டன்), ஹசரங்கா, சாமிகா கருணரத்னே, அசிதா ஃபெர்னாண்டோ, பினுரா ஃபெர்னாண்டோ, ஷிரான் ஃபெர்னாண்டோ, தனுஷ்கா குணதிலகா, நிசாங்கா, தனஞ்செயா டி சில்வா, ஆஷென் பண்டாரா, நிரோஷன் டிக்வெல்லா, ஷாங்கா, இசுரு உடானா, துஷ்மந்தா சமீரா, ரமேஷ் மெண்டிஸ், லக்ஷன் சந்தாகான், அகிலா தனஞ்செயா.