ஆசிய கோப்பை 2022: வங்கதேசத்தை வீழ்த்தி இலங்கை த்ரில் வெற்றி!

Updated: Fri, Sep 02 2022 06:46 IST
Image Source: Google

ஆசிய கோப்பை தொடரின் முக்கிய ஆட்டமாக வங்கதேசம், இலங்கை அணி மோதியது. இதில் வெற்றி பெறும் அணி சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறும் என்பதால் ரசிகர்களிடையே இந்த ஆட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

முக்கியமான ஆட்டத்தில் வங்கதேச அணியில் 3 மாற்றங்கள் செய்தது. அனாமுல் ஹக், முகமது நயிம் மற்றும் முகமது சயிஃபுதின் ஆகியோர் நீக்கப்பட்டு சபிர் ரஹ்மான், மெஹதி ஹசன் மற்றும் எபதாட் ஹூசைன் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. சேஸிங் செய்யும் அணியே வெற்றி பெறும் என்பதால், டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனையடுத்து களமிறங்கிய வங்கதேச அணியின் தொடக்க வீரர் சபிர் ரஹ்மான் 5 ரன்களில் ஆட்டமிழக்க, மெஹதி ஹசன் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார்.26 பந்தகளை எதிர்கொண்ட மெஹதி ஹசன் 38 ரன்கள் விளாசினார், இதில் 2 சிக்சர்கள், 2 பவுண்டரிகள் அடங்கும். மூன்றாவது வீரராக களமிறங்கிய ஷகிபுல் ஹசன் நிதானமாக விளையாடி 22 பந்துகளில் 24 ரன்கள் சேர்த்தார்.

இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் 6 ஆயிரம் ரன்கள் மற்றும் 400 விக்கெட்டுகள் வீழ்த்திய 2ஆவது வீரர் என்ற பெருமையை ஷகிபுல் ஹசன் பெற்றார். முதலிடத்தில் பிராவோ உள்ளார்.இதனைத் தொடர்ந்து களமிறங்கிய ஆபிஃப் ஹூசைன், 22 பந்துகளில் 39 ரன்கள் சேர்த்தார். அவருக்கு மஹ்முதுல்லா பக்க பலமாக நின்று 22 பந்துகளில் 27 ரன்கள் சேர்க்க, இறுதியில் மோசடெக் ஹூசைன் 9 பந்துகளில் 24 ரன்கள் குவிக்க, 20 ஓவர் முடிவில் வங்கதேசம் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் எடுத்தது.

அதன்பின் 184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியில் நிசாங்கா , குசேல் மெண்டிஸ் ஜோடி அதிரடியாக விளையாடியது. நிசாங்கா 16 ரன்களில் ஆட்டமிழக்க, அதிரடியாக ஆடிய குசேல் மெண்டிஸ் 37 பந்துகளில் 60 ரன்கள் குவித்தார். இதில் 4 பவுண்டரிகளும், 3 சிக்சர்களும் அடங்கும். அசலங்கா 1 ரன்னில் ஆட்டமிழக்க, குணத்திலகா 11 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஹசரங்கா 2 ரன்களில் வெளியேற, இலங்கை அணி சரிவை நோக்கி சென்றது. இருப்பினும் கேப்டன் ஷனாகா தனது வழக்கமான அதிரடியை காட்டியதால், ஆட்டத்தில் பரபரப்பு தொற்றி கொண்டது. 

எனினும் ஷனகாவும் முக்கிய கட்டத்தில் ஆட்டமிழந்தார். இலங்கை அணிக்கு 7 பந்துகளில் 13 ரன்கள் தேவை என்ற நிலையில், வங்கதேச அணி வீரர்கள் 2 நோ பாலை வீசினர். இதனை பயன்படுத்தி கொண்ட இலங்கை அணி 19.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 2 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது. 

இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி நடப்பாண்டு ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை