பயிற்சி ஆட்டம்: ஜிம்பாப்வேவை வீழ்த்தி இலங்கை அசத்தல் வெற்றி!

Updated: Tue, Oct 11 2022 12:58 IST
Image Source: Google

டி20 உலகக்கோப்பை தொடரின் எட்டாவது சீசன் அக்டோபர் 16ஆம் தேதி முதல் ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. மொத்தம் 16 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. 

இந்நிலையில் இத்தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. அதன் ஒருபகுதியாக இலங்கை - ஜிம்பாப்வே அணிகள் இன்று பயிற்சி ஆட்டத்தில் விளையாடியன. இப்போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.

அதன்படி களமிறங்கிய இலங்கை அணியில் பதும் நிஷங்கா - குசால் மெண்டிஸ் இணை தொடக்கம் தந்தனர். இதில் நிஷங்கா 21 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய டி சில்வா, குணத்திலகா, ராஜபக்ஷா ஆகியோர் தலா 17 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். 

இதற்கிடையில் குசாம் மெண்டிஸ் அரைசதம் கடந்து, 54 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் வநிந்து ஹசரங்கா அதிரடியாக விளையாடி 37 ரன்களைச் சேர்த்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்களைச் சேர்த்தது. 

மேலும் இப்போட்டியில் பந்துவீசிய ஜிம்பாப்வே அணியில் பதினோறு பேரும் பந்துவீசியுள்ளது டி20 கிரிக்கெட்டில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து இலக்கை துரத்திய ஜிம்பாப்வே அணியில் வெஸ்லி மதவெரே, மில்டன் ஷும்பா ஆகியோரைத் தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினர். இதில் அதிகபட்சமாக மதவெரே 43 ரன்களையும், மில்டன் ஷும்பா 32 ரன்களையும் சேர்த்தனர். 

இதனால் 20 ஓவர்கள் முடிவில் ஜிம்பாப்வே அணி 5 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் இலங்கை அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை