சாம்பியன் பட்டத்தை வென்ற இலங்கை; வீதிகளில் கோண்டாடிய ரசிகர்கள்!
நடப்பு ஆசிய கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது இலங்கை அணி. பரபரப்பாக நடைபெற்ற இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தியது இலங்கை அணி. அதனை கொழும்பு நகர வீதிகளில் கொண்டாடி தீர்த்துள்ளனர் இலங்கை நாட்டு மக்கள்.
அந்த நாடு தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. அதனால் அந்நாட்டு மக்கள் பெரும் துயரங்களை எதிர்கொண்டு வருகின்றனர். அவர்களுக்கு தங்கள் வலிகளை மறக்க செய்யும் மருந்தாக கிரிக்கெட் விளையாட்டு அமைந்துள்ளது. இப்போது அந்த அணி ஆசிய கோப்பையையும் வென்றுள்ளது.
நடப்பு ஆசிய கோப்பை இலங்கையில் தான் நடத்த வேண்டியிருந்தது. ஆனால் அங்கு நிலவும் சூழல் காரணமாக இந்த தொடர் அமீரகத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் தற்போது இலங்கை அணி பாகிஸ்தானை வீழ்த்தி 6ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி சாதித்துள்ளது.
இந்த இறுதிப் போட்டியை மக்கள் கண்டுகளிக்கும் வகையில் கொழும்பு நகர வீதிகளில் பெரிய அளவிலான திரைகள் அமைக்கப்பட்டது. அங்கு மக்கள் திரளாக இணைந்து போட்டியை பார்த்து ரசித்துள்ளனர். இலங்கை வெற்றி பெற்றதும் கொழும்பு நகர வீதிகளில் கொண்டாட்டம் களைகட்டியுள்ளது.
அதுகுறித்து போட்டியை தொகுத்து வழங்கிய முன்னாள் இலங்கை வீரர் ரஸ்ஸல் அர்னால்டு தெரிவித்திருந்தார். மைதானத்தில் பார்ப்பது வெறும் சாம்பிள் தான் இலங்கையில் இது போல பல மடங்கு கொண்டாட்டம் இருக்கும் என சொல்லி இருந்தார். அதற்கேற்றது போலவே இலங்கை வீதிகளில் ரசிகர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி மகிழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.