ENGW vs SLW, 3rd T20I: சமாரி அத்தபத்து அதிரடியில் இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றவது இலங்கை!
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இலங்கை மகளிர் அணி தற்போது மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடிவந்தது. இதில் முதல் போட்டியை இங்கிலாந்து அணியும், இரண்டாவது போட்டியில் இலங்கை அணியும் வெற்றியைப் பதிவுசெய்தது.
இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி டெர்பியில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்து இலங்கை அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணியில் டேனியல் வையட் ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழக்க, அடுத்து வந்த பௌச்சர் 23, அலிஸ் கேப்ஸி 9, கேப்டன் ஹீதர் நைட் 18, எமி ஜோன்ஸ் 20, ஃப்ரெயா கெம்ப் ஒரு ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பி ஏமாற்றமளித்தனர்.
அதன்பின் களமிறங்கிய வீராங்கனைகளாலும் இலங்கை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் இங்கிலாந்து மகளிர் அணி 19 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 116 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இலங்கை தரப்பில் சமாரி அத்தப்பத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணிக்கு சமாரி அத்தபத்து - அனுஷ்கா சஞ்சீவினி இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயத்தினர். இதில் சஞ்சீவினி 20 ரன்களுக்கு ஆட்டமிழக்க, மறுபக்கம் அதிரடியாக விளையாடி வந்த சமாரி அத்தபத்து 44 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் களமிறங்கிய ஹர்ஷிதா சமரவிக்ரமா இறுதிவரை ஆட்டமிழக்காமல் அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் இலங்கை அணி 17 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 3 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றிபெற்றதுடன், டி20 தொடரையும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. மேலும் இப்போட்டியின் ஆட்டநாயகியாகவும், தொடர் நாயகியாகவும் தேர்வுசெய்யப்பட்டார்.