இலங்கை ரசிகர்களை பாராட்டிய ஆரோன் ஃபிஞ்ச்!

Updated: Sat, Jun 25 2022 17:28 IST
Image Source: Google

இலங்கைக்கு எதிரான டி20 தொடரை வென்ற ஆஸ்திரேலிய அணி, ஒருநாள் தொடரில் 2-3 எனத் தோல்வியடைந்துள்ளது. கடைசி ஒருநாள் ஆட்டத்தை 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது ஆஸ்திரேலிய அணி.

இலங்கையில் பல்வேறு நெருக்கடிகள் நிலவும் இச்சமயத்தில் இலங்கைக்குச் சுற்றுப்பயணம் செய்துள்ள ஆஸ்திரேலிய வீரர்களுக்கு இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் நன்றி தெரிவித்துள்ளார்கள். கடைசி ஒருநாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு ஆதரவுக்கும் தெரிவிக்கும் விதமாக அவர்கள் நடந்துகொண்டார்கள். 

ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஆஸ்திரேலிய அணியின் சீருடையை அணிந்து வந்தும் ஆஸ்திரேலிய அணியின் கொடியைக் காண்பித்தும் நெகிழ வைத்தார்கள். மைதானத்தில் மஞ்சள் நிறத்தைப் பல இடங்களில் காண முடிந்தது. ஆஸ்திரேலிய வீரர்களும் இலங்கை ரசிகர்களுக்கு மைதானத்திலேயே பாராட்டு தெரிவித்தார்கள். 

இந்நிலையில், இலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “இலங்கைக்கு நாங்கள் சுற்றுப்பயணம் செய்ததில் மகிழ்ச்சியடைகிறோம். சமீபத்தில் இலங்கை தேசம் எதிர்கொண்டு வரும் சிக்கல்களை நாங்கள் அறிவோம். இதுவரை நாங்கள் விளையாடிய எட்டு வெள்ளைப் பந்து ஆட்டங்களும் அவர்களுக்கு மகிழ்ச்சியளித்திருக்கும் என நம்புகிறோம். 

எங்கள் அணியின் சீருடையை ரசிகர்கள் அணிந்து வந்தது அபாரம். இலங்கை மக்கள் அருமையான மக்கள். அவர்கள் அளிக்கும் ஆதரவுக்கு நிகராக எதுவும் இல்லை. அவர்கள் அருமையான கிரிக்கெட் ரசிகர்கள். வெறும் சப்தம் எழுப்புவதோடு நிற்க மாட்டார்கள். 

ஆட்டத்தில் வெளிப்படும் உணர்வுகளுடன் பயணிப்பார்கள். இலங்கை அணி ஆதிக்கம் செலுத்தும்போது வேறு எந்த ரசிகர்களை விடவும் அதிகமாகச் சப்தம் எழுப்பி ஆதரவளிப்பார்கள்” என்று தெரிவித்தார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை