ENG vs SL: இலங்கை டெஸ்ட் அணி அறிவிப்பும்; ஜெஃப்ரி வண்டர்சேவுக்கு இடம்!

Updated: Wed, Aug 07 2024 18:55 IST
Image Source: Google

இலங்கை அணி தற்சமயம் இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதனையடுத்து இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இலங்கை அணி அங்கு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இங்கிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையேயான இந்த டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 21ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 10ஆம் தேதி முடிவடையவுள்ளது.

இந்நிலையில் இத்தொடருக்கான பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த அணியில் ஸாக் கிரௌலி மற்றும் திலான் பென்னிங்டன் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டு, அறிமுக வீரர் ஜோர்டன் காக்ஸ், மற்றும் ஒல்லி ஸ்டோன் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மற்றபடி வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் விளையாடிய வீரர்கள் இங்கிலாந்து அணியில் இடம்பிடித்துள்ளனர்.

இந்நிலையில் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் தனஞ்செயா டி சில்வா தலைமையிலான இந்த அணியில் அறிமுக வீரர்கள் நிசலா தாரகா, மிலன் ரத்னயகே ஆகியோருடன், இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜெஃப்ரி வண்டர்சேவுக்கும் இலங்கை டெஸ்ட் அணியில் இடம் கிடைத்துள்ளது. 

மேற்கொண்டு தொடக்க வீரர்களான திமுத் கருணாரத்னே, பதும் நிஷங்கா, நிஷான் மதுஷ்கா, குசல் மெண்டிஸ், ஏஞ்சலோ மேத்யூஸ், தினேஷ் சண்டிமால் போன்ற நட்சத்திர வீரர்களும் இலங்கை டெஸ்ட் அணியில் தங்களது இடத்தை தக்கவைத்துள்ளனர். அவர்களுடன் ஆல் ரவுண்டரான கமிந்து மெண்டிஸும் அணியில் இடம்பிடித்துள்ளார். அவர்களுடன் லஹிரு குமாரா, விஷ்வா ஃபெர்னாண்டோ, அசிதா ஃபெர்னாண்டோ, கசுன் ரஜிதா ஆகியோரும் இடம்பிடித்துள்ளது. 

 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::