SA vs IND: இந்திய அணி தோல்வி குறித்து பேசிய கேஎல் ராகுல்!

Updated: Fri, Jan 07 2022 13:00 IST
Image Source: Google

இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்று முடிந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி இந்திய அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. அதுமட்டுமின்றி மூன்று போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரையும் தற்போது (1-1) என்ற கணக்கில் சமன் செய்துள்ளது. 

இதன்காரணமாக 11ஆம் தேதி தொடங்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும் என்ற சுவாரஸ்யமான சூழ்நிலை தற்போது ஏற்பட்டுள்ளது .

இந்நிலையில் இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியின் தோல்விக்கு பிறகு பேசிய இந்திய அணியின் கேப்டன் ராகுல் தோல்வி குறித்து பேசுகையில், “ஒவ்வொரு போட்டியையும் நாங்கள் வெற்றி பெற வேண்டும் என்று விரும்பி விளையாடுகிறோம். மேலும் அதற்கான கடின உழைப்பையும் களத்தில் அளித்து வருகிறோம்.

ஆனால் இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியின் வீரர்கள் மிகவும் சிறப்பாக விளையாடினார்கள். இந்த வெற்றிக்கு அவர்கள் தகுதியானவர்கள் தான். மேலும் போட்டியின் நான்காவது நாள் நாங்கள் நிச்சயம் ஸ்பெஷலாக ஏதாவது ஒன்றை செய்வோம் என்று நினைத்தோம். ஆனால் வெற்றிக்கு 122 ரன்கள் மட்டுமே அடிக்க வேண்டும் என்பது அவர்களுக்கு சாதகமாக அமைந்துவிட்டது.

அவர்களுடைய பேட்ஸ்மேன்கள் இந்த போட்டியில் மிக சிறப்பாக விளையாடினார்கள். முதல் இன்னிங்சில் 202 ரன்கள் என்பது போதுமானது கிடையாது. நாங்கள் 50 முதல் 60 ரன்கள் வரை குறைவாக அடித்து விட்டோம். அதன் காரணமாகவே இந்த போட்டியில் தோல்வியை சந்திக்க நேர்ந்தது.

கடினமான சூழலில் சற்று கூடுதல் ரன்களை அடிக்க வேண்டியது அவசியம். அந்த வகையில் ஷர்துல் தாகூர் எங்களுக்கு சிறப்பான ஒரு இன்னிசை கொடுத்தார். பந்துவீச்சிலும் அவர் முதல் இன்னிங்சில் சிறப்பாக செயல்பட்டார்” என தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை