AUS vs ENG, 2nd ODI: ஸ்டார்க், ஸாம்பா அபாரம்; தொடரை வென்றது ஆஸ்திரேலியா!

Updated: Sat, Nov 19 2022 16:23 IST
Image Source: Google

இங்கிலாந்து அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றிபெற்று அசத்தியது.

இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்றால் தொடரை வென்றுவிடும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அதன்படி ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸுக்கு ஓய்வு அளிக்கும்விதமாக இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியின் புதிய கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹசில்வுட் களமிறங்கினார். அவர் இதற்கு முன்பு எந்தவொரு ஆட்டத்திலும் கேப்டனாக இருந்ததில்லை. அதேபோல இங்கிலாந்து அணியின் கேப்டனாக பட்லருக்குப் பதிலாக மொயீன் அலி செயல்பட்டார். 

இதையடுத்து இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. வார்னர் 16 ரன்களுக்கும் டிராவிஸ் ஹெட் 19 ரன்களுக்கும் ஆட்டமிழந்தார்கள். இதன்பிறகு ஸ்மித்தும் லபுஷாக்னே அருமையான கூட்டணி அமைத்தார்கள். 25 ஓவர்களுக்குப் பிறகு ஆடுகளம் ரிவர்ஸ் ஸ்விங்குக்கு ஏற்றவாறு மாறியது. 

ரன்கள் எடுக்க ஓரளவு சிரமம் ஏற்பட்டது. இருப்பினும் ஸ்மித் - லபுஷாக்னே கூட்டணி 112 பந்துகளில் 101 ரன்கள் எடுத்தார்கள். அதன்பின் லபுஷாக்னே 58 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதன்பிறகு ஸ்மித் - மிட்செல் மார்ஷ் கூட்டணி 95 பந்துகளில் 90 ரன்கள் கூட்டணி அமைத்ததால் ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 280 ரன்கள் எடுத்தது. 

இருப்பினும் இப்போட்டியில்சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஸ்டீவ் ஸ்மித், 114 பந்துகளில் 94 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மிட்செல் மார்ஷ் 50 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இங்கிலாந்துத் தரப்பில் அடில் ரஷித் 3 விக்கெட்டுகளும், டேவிட் வில்லி, கிறிஸ் வோக்ஸ் தலா 2 விக்கெட்டுகளும் எடுத்தார்கள்.  

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர் ஜேசன் ராய் மற்றும் கடந்து போட்டி சதமடித்த டேவிட் மாலன் ஆகியோர் ரன்கள் ஏதுமின்றி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்தனர். அதன்பின் பிலிப் சால்டும் 23 ரன்களோடு பெவிலியன் திரும்ப இங்கிலாந்து அணி தடுமாறியது.

பின்னர் ஜோடி சேர்ந்த ஜேம்ஸ் வின்ஸ் - சாம் பில்லிங்ஸ் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். தொடர்ந்து சிறப்பாக செயல்பட்ட இருவரும் அடுத்தடுத்து அரைசதங்களை கடந்தனர். பின் 60 ரன்களிலும், 71 சாம் பில்லிங்ஸும் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினர். 

இதைத்தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து வீரர்களால் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் 38.5 ஓவர்களில் இங்கிலனது அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 208 ரன்களை மட்டுமே எடுத்தது. ஆஸ்திரேலிய தரப்பில் மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஸாம்பா ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரைக் கைப்பற்றி அசத்தியுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை