சிஎஸ்கே அணியின் கேப்டன் மாற்றம் குறித்து பயிற்சியாளர் விளக்கம்!

Updated: Thu, Mar 21 2024 20:50 IST
சிஎஸ்கே அணியின் கேப்டன் மாற்றம் குறித்து பயிற்சியாளர் விளக்கம்! (Image Source: Google)

ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் நாளை கோலாகலமாக தொடங்கவுள்ளது. இத்தொடரின் முதல் போட்டியிலேயே ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கும்வகையில் முதல் லீக் போட்டியிலேயே நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. 

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியிலிருந்து மகேந்திர சிங் தோனி விலகியுள்ளார். இதையடுத்து நடப்பு ஐபிஎல் சீசனுக்கான சிஎஸ்கே அணியின் கேப்டனாக அதிரடி தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார். 

இதுகுறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், ஐபிஎல் 2024ஆம் ஆண்டு தொடர் தொடங்குவதற்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த மகேந்திர சிங் தோனி தனது கேப்டன் பொறுப்பை ருதுராஜ் கெய்க்வாட்டிடம் ஒப்படைத்துள்ளார்” என்று அறிவித்துள்ளது.  

இந்நிலையில் சிஎஸ்கே அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து எம்எஸ் தோனி விலகியது குறித்து அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளமிங் விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “சென்னை அணியின் எதிர்காலத்தை கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. புதிய கேப்டனை நியமிக்க இதுவே சரியான நேரம் என தோனி கருதியதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

 

2022ஆம் ஆண்டு ஜடேஜா-வை கேப்டனாக நியமனம் செய்ததில் இருந்து நிறைய விஷயங்களை நாங்கள் தற்போது கற்றுள்ளோம். எனவே கடந்த முறை இல்லாத வகையில் அணி சிறப்பாக செயல்படும் என எதிர்பார்க்கிறோம். ஜடேஜா முழுமையாக ருத்துராஜ் கெய்க்வாட் பக்கம் உள்ளார். அணியின் கேப்டனாக முடிவுகளை ருதுராஜ் எடுப்பார். இருந்தாலும் நிச்சயம் அவர் தோனி, ஜடேஜா போன்ற மூத்த வீரர்களின் அலோசனையை மைதானத்தில் பெறுவார்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை