லபுஷாக்னே மீண்டும் பிளேயிங் லெவனில் இடம்பிடிப்பார் - ஸ்டீவ் ஸ்மித்
WI vs AUS, 2nd Test: ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் பிளேயிங் லெவனில் மீண்டும் இடம் பெற போராடும் மார்னஸ் லாபுஷாக்னேவுக்கு ஆதரவாக ஆஸ்திரேலிய அணியின் அணுபவ வீரர் ஸ்டீவ் ஸ்மித் தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே பார்படாஸில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியானது 159 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது போட்டி ஜூலை 3ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இப்போட்டிக்காக இரு அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. முன்னதாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் சோபிக்க தவறியதன் காரணமாக ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் மார்னஸ் லபுஷாக்னே பிளேயிங் லெவனில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் பிளேயிங் லெவனில் லபுஷாக்னே மீண்டும் இடம்பிடிப்பார் என அந்த அணியின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய ஸ்மித், “அவர் உண்மையில் ஒரு நல்ல ஃபார்மில் இருக்கிறார். கடைசி ஆட்டத்திற்குப் பிறகு நான் அதைச் சொன்னேன் என்று நினைக்கிறேன் - உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் அவர் பெரிய ஸ்கோரை எடுக்காமல் இருந்தாலும் நன்றாக பேட் செய்தார் என்று நினைக்கிறேன். மேலும் அவருடைய அசைவுகள், அவர் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட விதம் அருமையாக இருந்தது என்று நினைத்தேன். அவர் நன்றாக பேட்டிங் செய்கிறார் என்று நினைத்தேன்.
அவர் கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை என்றாலும், அழுத்தங்கள் இல்லாமல் அவர் வேலை செய்ய விரும்பும் சில விஷயங்களில் பணியாற்ற அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அவரது சிறந்த நிலையில், அவர் உலகில் உள்ள மற்ற வீரர்களைப் போலவே சிறந்தவர் என்பது எனக்கு தெரியும். அதனால் அவர் மீண்டும் அணியின் பிளேயிங் லெவனில் இடம்பிடிப்பார் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.
Also Read: LIVE Cricket Score
ஆஸ்திரேலிய அணிக்காக கடந்த 2018ஆம் ஆண்டு சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான மார்னஸ் லபுஷாக்னே இதுவரை 58 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 11 சதன்கள் மற்றும் 23 அரைசதங்கள் என 4435 ரன்களை எடுத்துள்ளார். இருப்பினும் அவர் கடந்த பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி உள்ளிட்ட தொடர்களில் சிறப்பாக செயல்படாததன் காரணமாக பிளேயிங் லெவனில் இருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.