ஆஷஸ் 2023: மீண்டும் சர்ச்சையை கிளப்பிய நடுவரின் ரன் அவுட் தீர்ப்பு!

Updated: Fri, Jul 28 2023 23:07 IST
ஆஷஸ் 2023: மீண்டும் சர்ச்சையை கிளப்பிய நடுவரின் ரன் அவுட் தீர்ப்பு! (Image Source: Google)

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் தொடர் சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாமல் நடந்து வருகிறது. ஒவ்வொரு போட்டியிலும் ஏதோவொரு விவகாரத்தில் ரசிகர்கள் மோதிக் கொள்கின்றனர். அல்லது களத்தில் ரசிகர்கள் செய்யும் சேட்டை சர்ச்சையாகி வருகிறது. ஏற்கனவே பேர்ஸ்டோவ் ரன் அவுட் சர்ச்சை, அலெக்ஸ் கேரி பியூட்டி பார்லர் சர்ச்சை உள்ளிட்டவை விவாதமாகியது.

பின்னர் 4ஆவது போட்டி மட்டும் மழையால் டிராவானதால் எந்த சர்ச்சையும் இல்லாமல் முடிவடைந்தது. இந்நிலையில் லண்டன் ஓவலில் நடந்து வரும் 5ஆவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 283 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இதன்பின் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 61 ரன்கள் எடுத்திருந்தது.

இதையடுத்து இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியது. இன்றைய நாளில் இங்கிலாந்து பவுலர்களின் ஆக்ரோஷத்தில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து வீழ்ந்தனர். லபுஷாக்னே 9 ரன்களிலும், கவாஜா 47 ரன்களிலும், டிராவிஸ் ஹெட் 4 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். தொடர்ந்து வந்து அதிரடியாக விளையாடிய மார்ஷ் 16 ரன்களிலும், அலெக்ஸ் கேரி 10 ரன்களிலும் ஆட்டமிழக்க, ஆஸ்திரேலிய அணி ல்185 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தவித்தது.

இருப்பினும் ஸ்டீவ் ஸ்மித் களத்தில் இருந்ததால் ஆஸ்திரேலிய ரசிகர்கள் நம்பிக்கையுடன் இருந்தனர். இந்த நிலையில் 77ஆவது ஓவரை வீசிய கிறிஸ் வோக்ஸ் பந்துவீச்சில் ஸ்டீவ் ஸ்மித் 2ஆவது ரன்னுக்கு ஓடிய போது, இங்கிலாந்து அணியின் மாற்று வீரர் ஜார்ஜ் விரைந்து பந்தை பேர்ஸ்டோவ் கைகளுக்கு கொடுத்தார். இதனை சரியாக பெற்ற பேர்ஸ்டோவ், ஸ்டீவ் ஸ்மித்தை ரன்அவுட் செய்து அசத்தினார். இதனால் இங்கிலாந்து வீரர்கள் மட்டுமல்லாமல் ரசிகர்களும் உற்சாகமடைந்தனர்.

இதற்கு முடிவு மூன்றாம் நடுவரிடம் கொண்டு செல்லப்பட்டது. அதில் நடுவர் நிதின் மேனன், பார்த்த போது ஸ்டீவ் ஸ்மித் க்ரீஸிற்கு வெளியில் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை பார்த்த ஸ்டீவ் ஸ்மித் பெவிலியன் திரும்பி கொண்டிருந்தார். ஆனால் களத்தில் இருந்த நடுவர்கள் ஸ்டீவ் ஸ்மித்தை காத்திருக்குமாறு அறிவுறுத்தினர். இதனால் சூழல் பரபரப்பானது. அவுட் என்று தெரிந்தும் எதற்காக நடுவர்கள் ஸ்டீவ் ஸ்மித் வெளியேறுவதை தடுக்கிறார்கள் என்று சந்தேகம் எழுந்தது.

அதுமட்டுமல்லாமல் மூன்றாம் நடுவர் நிதின் மேனன் மீண்டும் மீண்டும் பேர்ஸ்டோவின் கைகளை பார்த்துக் கொண்டே இருந்தார். அதில் இங்கிலாந்து ஃபீல்டர் ஜார்ஜ் வீசிய பந்தை கைகளில் பெறுவதற்கு முன்பாக பேர்ஸ்டோவின் கைகள் பைல்ஸை தட்டியது தெரிய வந்தது. இதனால் மூன்றாம் நடுவர் நாட் அவுட் கொடுத்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த இங்கிலாந்து வீரர் பிராட், கள நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதேபோல் இங்கிலாந்து ரசிகர்கள் நடுவரின் முடிவை ஏற்றுக் கொள்ளாமல் ஸ்டீவ் ஸ்மித்தை வம்புக்கு இழுக்கும் வகையில் கிண்டல் செய்தனர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை