ஸ்லிப்பில் அபாரமான கேட்சை பிடித்த ஸ்டீவ் ஸ்மித் - வைரலாகும் காணொளி!

Updated: Wed, Feb 12 2025 15:25 IST
Image Source: Google

இலங்கை - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி கொழும்புவில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் பதும் நிஷங்கா 4 ரன்களுக்கும், அவிஷ்கா ஃபெர்னாண்டோ ஒரு ரன்னிலும் என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய குசால் மெண்டிஸ் 19 ரன்னிலும், கமிந்து மெண்டிஸ் 5 ரன்னிலும், ஜனித் லியானகே 11 ரன்னிலும் என பெவிலியன் திரும்பினர். 

அதன்பின் ஜோடி சேர்ந்த கேப்டன் சரித் அசலங்கா மற்றும் துனித் வெல்லாலகே இணை பொறுப்புடன் விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தனர். இதில் வெல்லாலகே 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 30 ரன்களைச் சேர்த்த நிலையில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய வநிந்து ஹசரங்கா, மஹீஷ் தீக்ஷனா ஆகியோரும் சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர். ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுமுனையில் அபாரமாக விளையாடிய சரித் அசலங்கா சதமடித்து அசத்தினார். 

இப்போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சரித் அசலங்கா 14 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 127 ரன்களைச் சேர்த்தார். இதனால் இலங்கை அணி 46 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 214 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் சீன் அபோட் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனையடுத்து 215 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி விளையாடி வருகிறது. 

இந்நிலையில் இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பிடித்த கேட்ச் ஒன்று ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதன்படி இன்னிங்ஸின் 26ஆவது ஓவரை மேத்யூ ஷார்ட் வீசிய நிலையில் அந்த ஓவரின் ஐந்தாவது பந்தை துனித் வெல்லாலகே தடுத்து விளையாட முயற்சித்த நிலையில், பந்து அவரது பேட்டில் பட்டு எட்ஜாகியது. அப்போது ஸ்லீப்பில் நின்றிருந்த ஸ்டீவ் ஸ்மித் ஒற்றை கையில் கேட்ச் பிடித்து அசத்தினார். 

Also Read: Funding To Save Test Cricket

இதனால் இப்போட்டியில் 30 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் வெல்லாலகே தனது விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். இந்நிலையில் ஸ்டீவ் ஸ்மித் பிடித்த இந்த அபாரமான கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்போட்டியில் இலக்கை நோக்கி விளையாடி வரும் ஆஸ்திரேலிய அணி தற்போது வரை 4 விக்கெட் இழப்பிற்கு 53 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை