டெஸ்ட் கிரிக்கெட்டை பாதுகாக்க ஐசிசி நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஸ்டீவ் வாக்! 

Updated: Mon, Jan 01 2024 21:40 IST
டெஸ்ட் கிரிக்கெட்டை பாதுகாக்க ஐசிசி நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஸ்டீவ் வாக்!  (Image Source: Google)

இந்தியாவுக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெறும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. இதன்மூலம் வாயிலாக தங்களுடைய சொந்த மண்ணில் இந்தியாவுக்கு எதிராக ஒரு டெஸ்ட் தொடரில் தோல்வியை சந்திக்காமல் இருந்து வரும் கௌரவத்தை தக்க வைத்துக் கொண்ட அந்த அணி ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்று அசத்தியுள்ளது.

இந்த தொடரை முடித்துக் கொண்டு ஜனவரி மாதம் இறுதியில் நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் தென் ஆப்பிரிக்கா அங்கு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. ஆனால் அதே சமயத்தில் ஐபிஎல் போல சிஎஸ்ஏடி20 எனப்படும் டி20 தொடரை தென் ஆப்பிரிக்க வாரியம் நடத்துகிறது. அதில் டேவிட் மில்லர் முதல் ரபாடா வரை அனைத்து தென் ஆப்பிரிக்க நட்சத்திர முதன்மை வீரர்களும் பல்வேறு அணிகளுக்காக விளையாட உள்ளனர்.

இதன் காரணமாக அந்த நியூசிலாந்து தொடரில் இதற்கு முன் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகாத 7 புதுமுக வீரர்களை கொண்ட 2ஆம் தர அணி விளையாடுமென்று தென் ஆப்பிரிக்க வாரியம் அறிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பணம் தான் முக்கியம் என்று முடிவெடுத்துள்ள தென் ஆப்பிரிக்கா இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகாத நெய்ல் பிராண்ட் எனும் 26 வயது வீரரை தங்களின் கேப்டனாக அறிவித்டதள்ளது. 

இந்நிலையில் பணத்துக்காக கிரிக்கெட்டின் உயிர்நாடியான டெஸ்ட் போட்டிகளை புறக்கணிக்கும் தென் ஆப்பிரிக்க வாரியத்தின் இந்த முடிவை முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் வாக் கடுமையாக எதிர்த்துள்ளார். மேலும் இந்த நிகழ்வுகள் வருங்காலத்தில் நடக்காமல் ஐசிசியுடன் சேர்ந்து இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற சக்தி மிகுந்த வாரியங்கள் தடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “உண்மையில் டெஸ்ட் கிரிக்கெட் குறித்து அவர்களுக்கு கவலையில்லை. தென் ஆப்பிரிக்க அணியின் முக்கிய வீரர்களின்றி அந்த அணி நியூசிலாந்து சென்றால், நான் சொல்வது கண்டிப்பாக நடக்கும். நான் நியூசிலாந்தில் இருந்தால், இந்த டெஸ்ட் தொடரிலேயே விளையாட மாட்டேன். முக்கிய வீரர்களின்றி விளையாடும் போட்டி எதற்காக என்று புரியவில்லை.

நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு அவர்கள் உரிய மதிப்பளிக்காதபோது எதற்காக விளையாட வேண்டும். டெஸ்ட் கிரிக்கெட் அழியும் தருணம் ஆரம்பித்துவிட்டதா எனக் கேட்கத் தோன்றுகிறது. கண்டிப்பாக, ஐசிசி மற்றும் இந்தியா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் கிரிக்கெட் வாரியங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டைப் பாதுகாக்க கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை