ஸ்டோக்ஸின் வருகை இங்கிலாந்திற்கு பெரும் பலனாக அமையும் - அலெஸ்டர் குக்

Updated: Tue, Jun 22 2021 12:27 IST
Image Source: Google

இங்கிலாந்து அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ். இவர் நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் போது காயமடைந்து, பாதியிலேயே வெளியேறினார். 

தற்போது காயத்திலிருந்து மீண்டுள்ள பென் ஸ்டோக்ஸ், இங்கிலாந்தின் உள்ளூர் டி20 தொடரான டி20 பிளாஸ்ட் போட்டிகளில் விளையாட தொடங்கியுள்ளார். இதனால் அவர் மீண்டும் சர்வதேச போட்டிகளுக்கு திரும்புவார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். 

இந்நிலையில், பென் ஸ்டோக்ஸ் காயத்திலிருந்து மீண்டு விளையாடத் தொடங்கியுள்ளது இங்கிலாந்து அணிக்கு பெரும் பலனாக அமையும் என அந்த அணியின் முன்னாள் கேப்டன் அலெஸ்டர் குக் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அலெஸ்டர் குக்,“பென் ஸ்டோக்ஸ் காயத்திலிருந்து மீண்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. அதிலும் இந்தியாவுடனாக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அவரால் விளையாட முடியும் என்பதால் அது நிச்சயம் இங்கிலாந்து அணிக்கு பலனளிக்ககூடிய ஒன்று தான். 

மேலும் இத்தொடர் இங்கிலாந்தில் நடைபெறவுள்ளதால் நிச்சயம் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது. ஏனெனில் இங்கிலாந்தில் எங்கள் அணியை வீழ்த்துவது அவ்வளவு எளிதானது அல்ல. 

ஆனால் அவர்கள் இங்கு இரண்டு மாதங்களுக்கு மேலாக தங்கவுள்ளதால், அவர்கள் மனரீதியாக தொடருக்கு தயாராகி விடுவர். ஆனாலும் அவர்களால் இங்கு தொடரை வெல்ல முடியுமா என்றால் அது சந்தேகமான ஒன்றுதான்” என்று தெரிவித்துள்ளார். 

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய அணி, ஆகஸ்ட் - செப்டம்பர் மாதங்களில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை