ஐபிஎல் 2023: பேட்ஸ்மேனாக மட்டும் விளையாடும் ஸ்டோக்ஸ்; பின்னடைவில் சிஎஸ்கே!

Updated: Tue, Mar 28 2023 19:35 IST
Stokes To Play As Specialist Batter In Early Stages Of IPL 2023 (Image Source: Google)

இந்திய ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் ஐபிஎல் 2023 தொடர் வரும் மார்ச் 31 முதல் அகமதாபாத் நகரில் கோலாகலமாக துவங்குகிறது. இந்த வருடத்தின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத்தை எதிர்கொள்ளும் முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் கடந்த வருடம் புள்ளி பட்டியல் 9ஆவது இடத்தை பிடித்து சந்தித்த தோல்வியிலிருந்து மீண்டெழுந்து 5ஆவது கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்குகிறது. 

அந்த அணிக்கு இம்முறை நம்பிக்கை நட்சத்திரம் ரவீந்திர ஜடேஜா ஃபார்முக்கு திரும்பியுள்ள நிலையில் உலகின் நம்பர் ஒன் வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டராகவும் இங்கிலாந்தின் உலக கோப்பை நாயகனாகவும் கொண்டாடப்படும் பென் ஸ்டோக்ஸ் விளையாடுவது பெரிய பலமாக பார்க்கப்படுகிறது. ஆனால் இங்கிலாந்தின் டெஸ்ட் கேப்டனாக செயல்படும் அவர் வரும் ஜூன் மாத துவக்கத்தில் சொந்த மண்ணில் அயர்லாந்துக்கு எதிராகவும் நடைபெறும் 1 போட்டி மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெறும் வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் தொடருக்கு தயாராவதற்காக 2023 ஐபிஎல் தொடரின் கடைசி சில போட்டிகளில் விளையாடப் போவதில்லை என்று கடந்த மாதமே வெளிப்படையாக அறிவித்தது சென்னை அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. 

போதாக்குறைக்கு நியூசிலாந்து மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் முழங்கால் காயத்தை சந்தித்த அவர் இந்த தொடரில் விளையாடுவாரா என்ற சந்தேகம் நிலவியது. இருப்பினும் ஐபிஎல் தொடருக்கு ஒரு மாதம் இருப்பதால் நிச்சயம் விளையாடுவேன் அதையும் வெளிப்படையாக அறிவித்த பென் ஸ்டோக்ஸ் தற்போது சென்னை அணியுடன் இணைந்து சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் பயிற்சிகளை மேற்கொண்டு விளையாட தயாராகி வருகிறார். இருப்பினும் முழங்காலில் சந்தித்த காயத்துக்கான சிகிச்சை எடுத்துக் கொண்டு வரும் அவர் அதில் முழுமையாக குணமடையும் வரை 2023 ஐபிஎல் தொடரில் பேட்டிங் மட்டும் தான் செய்வார் ஆனால் பந்து வீச மாட்டார் என்று சென்னை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹசி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “என்னுடைய புரிதல் என்னவெனில் அவர் இத்தொடரின் ஆரம்பத்திலிருந்தே பேட்ஸ்மேனாக விளையாட தயாராக இருக்கிறார். இருப்பினும் பவுலிங் பற்றி பொறுத்திருந்து பார்க்க வேண்டும். ஏனெனில் தற்போது தனது முழங்கால் காயம் குணமடைவதற்கு தேவையான ஊசிகளைப் போட்டுக் கொண்டுள்ளதால் நேற்றைய பயிற்சியில் அவர் லேசாக தான் பந்து வீசினார் என்பதை நான் அறிவேன்.

அந்த காயம் முழுமையாக குணமடைவதற்கு சென்னை மற்றும் இங்கிலாந்து வாரிய மருத்துவ குழுவினர் தொடர்ந்து அவரை கண்காணித்து வருகிறார்கள். எனவே இந்த தொடரின் ஆரம்பகட்ட சில போட்டிகளில் அவர் கண்டிப்பாக பந்து வீச மாட்டார் என்பதை நான் புரிந்து கொண்டுள்ளேன். ஒருவேளை அது சில வாரங்கள் வரை நீடிக்கலாம். தற்போதைக்கு அதைப்பற்றி 100 சதவீதம் தெரியாது என்றாலும் இந்த தொடரில் நிச்சயமாக அவர் விரைவில் பந்து வீசுவார் என்று உறுதியாக நம்புகிறோம்” என கூறினார்.

இதனால் இந்த ஐபிஎல் தொடரின் முதல் வாரத்தில் பென் ஸ்டோக்ஸ் பந்து வீசாமல் முழுமையான பேட்ஸ்மேனாக மட்டும் விளையாட இருப்பது தெரிய வருகிறது. அதனால் பந்து வீச்சு துறையில் ஆரம்பத்திலேயே சென்னை அணிக்கு பெரிய பின்னடைவு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் ஏற்கனவே முகேஷ் சௌத்ரி காயத்தால் விலகி விட்டார் என்று செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் இவரும் பந்து வீசவில்லை என்றால் அது ஆரம்பத்திலேயே கேப்டன் தோனிக்கு சரியான 11 பேர் அணியை தேர்வு செய்வதில் பெரிய சிரமத்தை ஏற்படுத்தும் என்று உறுதியாக சொல்லலாம். அத்துடன் தீபக் சஹர் போன்ற முதன்மை வேகப்பந்து வீச்சாளர்கள் பொறுப்புடன் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியமாகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை