புஜாரா இடத்தில் இவரை களமிறக்க வேண்டும் - சுனில் கவாஸ்கரின் அட்வைஸ்!
இலங்கைக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலிருந்து இனிமேல், ரோஹித் சர்மா டெஸ்ட் அணியின் கேப்டனாக செயல்படவுள்ளார். இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய டெஸ்ட் அணியில் ரஹானே, புஜாரா, இஷாந்த் சர்மா, சஹா ஆகிய சீனியர் வீரர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.
ரஹானே, புஜாரா ஆகிய இருவரும் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக சரியாக ஆடாமல் சொதப்பிவருகின்றனர். மிடில் ஆர்டரில் அவர்களது மோசமான பேட்டிங், இந்திய அணியை கடுமையாக பாதிக்கிறது. போட்டியின் முடிவுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே அணியின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு ஸ்ரேயாஸ் ஐயர், ஹனுமா விஹாரி ஆகிய இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் விதமாக அவர்கள் ஓரங்கட்டப்பட்டுவிட்டனர்.
அதேபோல இஷாந்த் சர்மா, ரிதிமான் சஹா ஆகிய சீனியர் வீரர்களும் இந்திய டெஸ்ட் அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டுள்ளனர். ரோஹித் சர்மா தலைமையில் எதிர்காலத்திற்கான வலுவான இந்திய அணி கட்டமைக்கப்படுகிறது. அதனால் சீனியர் வீரர்கள் ஓரங்கட்டப்பட்டுள்ளனர். சீனியர் வீரர்களை காரணமில்லாமல் ஓரங்கட்டவில்லை. இஷாந்த், சஹாவிற்கு அணியில் இடம் இல்லை. ஆனால் ரஹானே, புஜாரா ஆகிய இருவரும் சரியாக ஆடாததால் அவர்கள் தூக்கி எறியப்பட்டுள்ளனர்.
இந்திய அணிக்கு இவர்களது பங்களிப்பு தேவைப்பட்ட நேரத்திலும் ஏமாற்றமளித்தனர். அதனால் இந்திய அணி தோல்வியடைய நேரிட்டது. அதனால் தான் அடுத்தகட்டத்தை நோக்கிய தேடலில் இந்திய அணி இறங்கிவிட்டது.
டெஸ்ட் அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்ட புஜாரா இனிமேல் டெஸ்ட் அணியில் இடம்பிடிக்க வாய்ப்பில்லை. டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் ஆடிவந்த 3ஆம் வரிசை மிக முக்கியமான பேட்டிங் வரிசை. எனவே 3ம் வரிசையில் அடுத்து யார் களமிறங்குவார் என்பது பெரும் கேள்வியாக உள்ளது.
ஷுப்மன் கில், மயன்க் அகர்வால், ஹனுமா விஹாரி, கேஎல் ராகுல் ஆகிய வீரர்கள் அந்த வரிசையில் இறங்கவல்ல வீரர்கள். இந்நிலையில், இதுகுறித்து கருத்து கூறியுள்ள முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர், டெஸ்ட் கிரிக்கெட்டில் 4ஆம் வரிசையில் ஆடிவரும் விராட் கோலியே 3ஆம் வரிசையில் பேட்டிங் ஆடலாம் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள சுனில் கவாஸ்கர், “கோலி 3ஆம் வரிசையில் பேட்டிங் ஆடவேண்டும். அணியின் பெஸ்ட் பேட்ஸ்மேன்கள் 3ஆம் வரிசையில் தான் பேட்டிங் ஆடுவார்கள். ரிக்கி பாண்டிங் 3ஆம் வரிசையில் தான் பேட்டிங் ஆடினார். விரைவில் விக்கெட் விழுந்துவிட்டால் புதிய பந்தில் நன்றாக ஆடவல்லவர் மட்டுமல்லாது,
அதன்பின்னர் நல்ல தொடக்கத்தை அணிக்கு அமைத்து கொடுக்கவல்லவர் கோலி. எனவே கோலி 3ஆம் வரிசையில் இறங்கலாம். அப்படி இல்லையென்றால் ஹனுமா விஹாரியை இறக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.