ரவிச்சந்திரன் அஸ்வினை களம் இறக்குவது மிகவும் சரியான ஒன்றாக இருக்கும் - சுனில் கவாஸ்கர்!
இன்று இந்திய அணி தனது நான்காவது போட்டியில் வங்கதேச அணிக்கு எதிராக மகாராஷ்டிரா மாநிலம் புனே மைதானத்தில் விளையாடுகிறது. இந்த மைதானம் பெரும்பாலும் பேட்டிங் செய்வதற்கு சாதகமாகவே இதுவரை இருந்து வந்திருக்கிறது. தற்பொழுது இந்திய அணி தான் விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று, 6 புள்ளிகள் உடன் புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கிறது.
நியூசிலாந்து அணி நான்கு வெற்றிகள் பெற்று 8 புள்ளிகள் உடன் முதல் இடத்தில் இருக்கிறது. நடப்பு உலகக் கோப்பை தொடரில் ஆபத்தான அணியாக பார்க்கப்பட்டது வங்கதேச அணி. ஆஃப்கானிஸ்தான் மற்றும் நெதர்லாந்து யாரும் எதிர்பார்க்காத வெற்றிகளை பெற்றிருக்கின்றன. ஆனால் வங்கதேச அணி இன்னும் அப்படியான வெற்றிகள் எதையும் பெறவில்லை. அதே சமயத்தில் வங்கதேச அணியை எளிமையாக எடுத்துக் கொள்ள முடியாது.
இந்தப் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வினை களம் இறக்குவது மிகவும் சரியான ஒன்றாக இருக்கும் என்று சுனில் கவாஸ்கர் கருதுகிறார். அவர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு ஆதரவாக தன்னுடைய கருத்தை தொடர்ந்து முன்வைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து பேசிய அவர், “இன்று அஸ்வின் விளையாடுவதற்கு ஒரு வாய்ப்பு இருக்கிறது. சர்துல் தாக்கூருக்கு கொஞ்சம் ஓய்வு கொடுக்கலாம் என்று நினைத்தால், பங்களாதேஷ் அணியில் உள்ள இடதுகை வீரர்களை மனதில் வைத்து அஸ்வினுக்கு வாய்ப்பு கொடுக்கலாம். அதேசமயத்தில் அஸ்வின் இடதுகை பேட்ஸ்மேன்களுக்கு மட்டும் நல்ல பந்துவீச்சாளர் கிடையாது.
அவர் பொதுவாகவே எல்லோருக்கும் மிகச் சிறப்பாக பந்து வீசக் கூடியவர். ஆடுகளத்தில் உதவி இல்லை என்றாலும் கூட அவரால் சிறப்பாக பந்து வீச முடியும். அவருக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்படுவது அரிது என்று நினைக்கிறேன். இந்திய அணி விளையாடும் விதம், மற்றும் இந்திய அணி நெகழ்ச்சியை வெளிப்படுத்தும் விதம், எல்லாவற்றையும் விட இந்திய அணி காட்டும் முனைப்பு மற்றும் அச்சமற்ற தன்மை சிறப்பான ஒன்றாக இருந்து வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.