ரோஹித் டக் அவுட்டானதிற்கு இதுதான் காரணாம் - சுனில் கவாஸ்கர்!
நேற்று முந்தினம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 2023ஆம் ஆண்டிற்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் பங்கேற்ற இந்திய அணியானது 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இந்த உலகக் கோப்பை தொடரை அசத்தலாக தொடங்கியுள்ளது.
இருப்பினும் இந்த போட்டியில் 200 ரன்கள் என்கிற எளிய இலக்கினை துரத்திய இந்திய அணியானது இரண்டு ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் இணைந்து இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் இந்த போட்டியில் விளையாடிய கேப்டன் ரோகித் சர்மா டக் அவுட்டானது அனைவரது மத்தியிலும் விவாதத்தை எழுப்பியுள்ளது.
ஏனெனில் அண்மையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் கடைசி போட்டியில் 57 பந்துகளை சந்தித்த அவர் 81 ரன்களை குவித்து அதிரடி காட்டியிருந்தார். இவ்வேளையில் இந்த உலகக் கோப்பை தொடரிலும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டியிலேயே அவர் ரன் எதுவும் அடிக்காமல் ஆட்டமிழந்த விதம் அனைவரது மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் ரோஹித் சர்மா ஆட்டமிழந்த விதம் குறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர், “கடண்த 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் ரோஹித் சர்மா ஐந்து சதங்களுடன் சில அரை சதங்களையும் அடித்து அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அப்போது அவரது ஃபுட் வொர்க் சிறப்பாக இருந்தது.
ஆனால் இம்முறை ஆஸ்திரேலிய அணிக்கெதிரான போட்டியின் போது அவரது கால்கள் நகர்வதில் மிக தாமதம் இருந்தது. அதன் காரணமாகவே பந்தை சரியான இடத்தில் மீட் செய்ய முடியாமல் எல்.பி-யாகி வெளியேறினார் என்றும், அவரது ஃபுட் வொர்க்கில் மெத்தனம் ஏற்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.