தினேஷ் கார்த்திக்கின் அற்பணிப்பு குறித்து மனம் திறந்த சுனில் கவாஸ்கர்!

Updated: Tue, Jun 21 2022 22:01 IST
Sunil Gavaskar praises Dinesh Karthik (Image Source: Google)

ஐபிஎல் 2022 தொடருக்குப் பின் இந்திய அணி தனது சொந்த மண்ணில் பங்கேற்று வந்த 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் பரபரப்பான போட்டிகளுக்கு பின் 2 – 2 என்ற கணக்கில் சமனில் நிறைவு பெற்றது. இந்த தொடரில் நீண்ட நாட்களுக்கு பின் கம்பேக் கொடுத்த ஹர்திக் பாண்டியா மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் தான் பேட்டிங்கில் தூண்களாக செயல்பட்டார்கள். 

அதிலும் 3 வருடங்கள் கழித்து இந்தியாவுக்காக விளையாடிய தமிழகத்தின் நட்சத்திர வீரர் தினேஷ் கார்த்திக் பங்கேற்ற 4 போட்டிகளில் 92 ரன்களை 158.62 என்ற நல்ல ஸ்டிரைக் ரேட்டில் எடுத்து அற்புதமான கம்பேக் கொடுத்துள்ளார்.

ராஜ்கோட்டில் நடந்த 4ஆவது போட்டியில் 81/4 என இந்தியா தடுமாறிய போது 55 ரன்களை தெறிக்கவிட்ட அவர் டி20 கிரிக்கெட்டில் அதிக வயதில் அரைசதம் அடித்த இந்திய வீரர் என்ற எம்எஸ் தோனியின் சாதனை உடைத்து புதிய சாதனையுடன் இந்தியாவுக்கு வெற்றியைத் தேடிக் கொடுத்தார். 

கடந்த 2004இல் அறிமுகமாகி 3 வகையான இந்திய அணியிலும் விளையாடும் அளவுக்கு முன்னேறிய அவருக்கு அதே காலகட்டத்தில் அறிமுகமாகி அதிரடி விக்கெட் கீப்பர் மற்றும் கேப்டனாக உலக கோப்பைகளை வென்று கொடுத்த தோனி இருந்ததால் நிலையான வாய்ப்பு கிடைக்கவில்லை.

இருப்பினும் உள்ளூர் மற்றும் ஐபிஎல் தொடரில் மனம் தளராமல் போராடி வந்த அவர் கடைசியாக கடந்த 2019 உலக கோப்பையில் விளையாடியிருந்தார். அதன்பின் விஜய் ஹசாரே, சயீத் முஷ்டாக் அலி 2021 கோப்பை போன்ற உள்ளூர் தொடர்களில் சிறப்பாக செயல்பட்டு கேப்டனாக தமிழகத்திற்கு கோப்பையை வென்று கொடுத்த அவர் ஐபிஎல் தொடரில் கொல்கத்தாவுக்காக முடிந்த அளவுக்கு சிறப்பாக விளையாடிய போதிலும் இந்திய தேர்வுக் குழுவினர் கண்டுகொள்ளாமல் இருந்தனர். 

குறிப்பாக 2021 சீசனில் 17 போட்டிகளில் 223 ரன்களை 131.17 என்ற சுமாரான ஸ்டிரைக் ரேட்டில் மட்டுமே எடுத்த அவர் 36 வயதை கடந்த காரணத்தால் இந்திய அணிக்கு விளையாட தகுதியற்றவராக அனைவரும் நினைத்தனர்.

போதாக்குறைக்கு 2021இல் இங்கிலாந்தில் நடந்த வரலாற்றின் முதல் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியின் சார்பில் வர்ணனையாளராக அவதாரம் எடுத்த அவரின் கிரிக்கெட் கேரியர் முடிந்து விட்டதாகவே அனைவரும் நினைத்தனர். அந்த சமயத்தில் மழை எப்போது விலகும் என்ற அப்டேட் கொடுத்துக் கொண்டு வர்ணனையாளராக அவர் கலக்கியத்தை ரசிகர்கள் மறந்திருக்க முடியாது. 

இருப்பினும் தம்மால் இந்தியாவுக்காக டி20 கிரிக்கெட்டில் விளையாட முடியும் என்று தெரிவித்த அவர் அதை வாய் வார்த்தையாக மட்டும் சொல்லாமல் ஐபிஎல் 2022 தொடரில் 16 போட்டிகளில் 330 ரன்களை 183.33 என்ற தெறிக்கவிடும் ஸ்டிரைக் ரேட்டில் குவித்து நிரூபித்துக் காட்டினார்.

அதனால் கிடைத்த தென் ஆப்ரிக்க தொடரிலும் அசத்தியுள்ள அவர் டி20 உலகக் கோப்பையில் தனது இடத்தை ஏறக்குறைய உறுதி செய்துள்ளார். இந்நிலையில் வர்ணனையாளராக இருந்த போதும் இந்தியாவுக்காக விளையாடும் அர்ப்பணிப்புடன் இடையிடையே தினேஷ் கார்த்திக் பயிற்சி அடுத்ததாக அவருடன் வர்ணனை செய்த ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர்,“டெஸ்ட் சாம்பியன்ஷிப் வர்ணனையின் போது மதிய உணவு, இரவு உணவு என அனைத்தையும் நாங்கள் (கார்த்திக் உடன்) ஒன்றாக சேர்ந்து சாப்பிட்டோம். அந்த சமயத்தில் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் விளையாடும் தனது லட்சியத்தை அவர் என்னிடம் கூறினார். அந்த வகையில் துபாயில் கடந்த வருடம் நடந்த டி20 உலக கோப்பையில் அவர் இடம் பெறவில்லை. 

ஆனால் இந்த வருடம் மெல்போர்னுக்கு செல்லும் விமானத்தில் ஏறக்குறைய இடம்பிடித்துள்ளார். அவர் தற்சமயத்தில் என்ன மனநிலையுடன் இருக்கிறோம் என்பதற்கு ஏற்றார்போல் பயிற்சி எடுத்தார். வெளியில் இருக்கும் போது சூழ்நிலை எப்படி இருக்கும் என்பதைப் பொருத்து பயிற்சி மேற்கொண்டார்.

நீங்கள் 6 அல்லது 7ஆவது இடத்தில் பேட்டிங் செய்தால் உங்களால் 18 அல்லது 20 ஓவர்கள் பேட்டிங் செய்ய முடியாது. உங்களுக்கு 5 – 6 ஓவர்கள் மட்டுமே கிடைக்கும். அதற்கேற்றார்போல் எப்படி பயிற்சி செய்யாலம் என்ற கோணத்தில் அவர் செயல்பட்டார். அதற்காக அவர் ஸ்பெஷல் பயிற்சிகளை மேற்கொள்ள விரும்பி ஒரு கிளப்பில் சேர்ந்து கொண்டார்.

அவை அனைத்தும் இந்திய அணிக்கு திரும்ப வேண்டும் என்ற அவரின் அர்ப்பணிப்பை உங்களுக்கு காட்டுகிறது. இப்போது அவர் விளையாடுவதை பார்த்தால் உங்களால் ரசிக்காமல் இருக்க முடியாது. அந்த அளவுக்கு கடினமாக உழைத்த அவருக்கு தற்போது பலன் கிடைத்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை