ஐபிஎல் ஏலத்தில் வார்னரை தேர்ந்தெடுக்க கடும் போட்டி நிலவும் - சுனில் கவாஸ்கர்!
ஐபிஎல்லில் 2014ஆம் ஆண்டிலிருந்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் ஆடிவந்த ஆஸ்திரேலிய அதிரடி வீரரான டேவிட் வார்னர், 2016 ஐபிஎல்லில் சன்ரைசர்ஸ் அணிக்கு ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்தார். சன்ரைசர்ஸ் அணிக்கு தனது அபாரமான பேட்டிங் மற்றும் கேப்டன்சியின் மூலம் ஏராளமான வெற்றிகளை பெற்றுக்கொடுத்தவர் வார்னர்.
ஆனால் வார்னர் அணிக்கு அளித்த பங்களிப்பை எல்லாம் மறந்து, அவர் ஃபார்மில் இல்லாத காரணத்தால் ஐபிஎல் 14ஆவது சீசனின் 2ம் பாதியில் ஒன்றிரண்டு போட்டிகளுக்கு பின்னர் அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டார் வார்னர். கேப்டன்சி கேன் வில்லியம்சனிடம் ஒப்படைக்கப்பட்டு, வார்னருக்கு ஆடும் லெவனில் கூட இடம் வழங்கப்படவில்லை. வார்னர் மாதிரியான ஒரு கிரேட் பிளேயரை ஃபார்மை காரணம் காட்டி ஓரங்கட்டியது ரசிகர்கள் மட்டுமல்லாது முன்னாள் வீரர்களுக்கே பெரும் அதிர்ச்சியாக இருந்தது.
வார்னரின் மோசமான ஃபார்ம் டி20 உலக கோப்பையில் ஆஸ்திரேலிய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்துமோ என அந்த அணி கவலைப்பட்ட நிலையில், டி20 உலக கோப்பையில் 7 போட்டிகளில் 3 அரைசதங்கள் மற்றும் 48.16 என்ற சராசரியுடன் 289 ரன்களை குவித்து தொடர் நாயகன் விருதையும் வென்றார் வார்னர்.
அரையிறுதியில் பாகிஸ்தானுக்கு எதிராக 49 ரன்கள், இறுதிப்போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக 173 ரன்கள் என்ற இலக்கை விரட்டும்போது சிறப்பாக ஆடி அரைசதம் அடித்து 53 ரன்கள் என குவித்த வார்னர், ஆஸ்திரேலிய அணி முதல் முறையாக டி20 உலக கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக திகழ்ந்தார்.
தன்னை ஓரங்கட்டிய சன்ரைசர்ஸ் அணியிலிருந்து வார்னர் வெளிவந்துவிட்ட நிலையில், அடுத்த ஐபிஎல் சீசனில் புதிதாக 2 அணிகள் (அகமதாபாத், லக்னோ) சேர்ந்திருப்பதால், வார்னரை எந்த அணி ஏலத்தில் எடுக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் உள்ளது.
இந்நிலையில் அடுத்த சீசன் ஐபிஎல் தொடரில் வார்னரை ஏலத்தில் எடுக்க மிகப்பெரும் போட்டி நிலவும் என்று இந்திய அணி முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், ஹைதராபாத் அணி நிச்சயம் வார்னரை தக்கவைக்கப்போவதில்லை. யாரும் மறந்துவிட வேண்டாம், அடுத்த சீசனில் புதிதாக இரண்டு ஐபிஎல் அணிகள் விளையாடவுள்ளன. மேலும் அந்த அணிகள் வார்னரை தக்கவைக்க பெரும் ஆர்வத்தைக் காட்டும் என்று எதிர்பார்க்கிறேன்.
Also Read: T20 World Cup 2021
ஏனெனில் அவர் சிறப்பான வீரர் மட்டுமின்றி, அணியை வழிநடத்தும் திறனையும் பெற்றவர். அதனால் நிச்சயம் ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில் வார்னருக்கு கடும் போட்டி நிலவும்” என்று தெரிவித்துள்ளார்.