கிரிக்கெட்டில் ரெட் கார்ட்; முதல் வீரராக இடம்பிடித்த சுனில் நரைன் - வைரல் காணொளி!
வெஸ்ட் இண்டிஸின் உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடரான கரீபியன் பிரிமியர் லீக்கின் 12ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று கீரன் பொல்லார்டு கேப்டனாக இருக்கும் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்கும், செயின்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணிக்கும் இடையே நடந்த போட்டியில், வரலாற்று சிறப்புமிக்க ஒரு முக்கிய சம்பவம் நடந்திருக்கிறது.
இந்த வருட கரீபியன் பிரிமியர் லீக் டி20 போட்டியில், ஓவர்கள் மெதுவாக வீசுவதற்கு வித்தியாசமான தண்டனை முறைகள் கொண்டுவரப்பட்டிருக்கிறது. ஓவரை குறிப்பிட்ட நேரத்திற்குள் வீச வைப்பதோடு மட்டுமல்லாமல், திடீர் சுவாரசியத்தையும் உண்டாக்கக் கூடியதாக அமைந்திருக்கிறது. கரீபியன் பிரீமியர் லீக்கில் கொண்டுவரப்பட்ட புதிய விதி என்னவென்றால், 18ஆவது ஓவருக்குள் நுழையும் பொழுது மெதுவாக பந்துவீசி இருந்தால், அந்த ஓவரின் போது வெளிவட்டத்தில் 4 பீல்டர்கள் மட்டுமே நிற்க முடியும். இதே 19 ஆவது ஓவர் என்றால், வெளிவட்டத்தில் மூன்று பீல்டர்கள் மட்டுமே நிற்க முடியும்.
இந்த இடத்தில்தான் இதே விதி 20 ஆவது ஓவருக்கு வித்தியாசமாக மாறுகிறது. அதாவது 20ஆவது ஓவரின் போது, குறித்த நேரத்திற்குள் பந்து வீசி முடிக்கப்பட்டிருக்காமல் இருந்தால், வெளிவட்டத்தில் மூன்று பீல்டர்கள் மட்டுமே இருப்பார்கள். ஆனால் அணியில் இருந்து ஒரு வீரர் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியே அனுப்பப்படுவார். மொத்தம் 10 பேரை வைத்து மட்டுமே விளையாட வேண்டும். கால்பந்து போட்டியில் இருப்பது போல இந்த புதிய விதி கரீபியன் பிரிமீயர் லீக்கில் கொண்டுவரப்பட்டிருக்கிறது.
நேற்று முதலில் பந்து வீசிய டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி இருபதாவது ஓவரின் போது மெதுவாக பந்துவீசி இருந்தது. இதன் காரணமாக சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டது. அப்பொழுது கேப்டன் கீரன் பொல்லார்ட் யாரையாவது வெளியேற்ற வேண்டி இருந்ததால், அவர் சுனில் நரைனை வெளியேற்றினார். இந்த வகையில் ஒட்டுமொத்த கிரிக்கெட் வரலாற்றில் முதல் சிவப்பு அட்டை வாங்கிய அணியாக ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியும், தம் அணியிலிருந்து முதல்முறையாக ஒரு வீரரை சிவப்பு அட்டைக்காக வெளியேறிய கேப்டனாக பொல்லார்டும், வெளியேறிய வீரராக சுனில் நரைனும் இருக்கிறார்கள்.
இதுகுறித்து போட்டி முடிந்து பேசிய கீரன் பொல்லார்ட், “உண்மையைச் சொல்வது என்றால் அனைவருடைய கடின உழைப்பையும் இது வீணாக்கும் விதி. நாங்கள் சிப்பாய்களை போன்றவர்கள். சொன்னதைச் செய்யப் போகிறோம். எங்களால் முடிந்தவரை வேகமாக விளையாட போகிறோம். இது போன்ற ஒரு போட்டியில் 30 முதல் 45 நொடிகளுக்காக தண்டிக்கப்படுவீர்கள் என்றால் இது அபத்தமானது” என்று கூறியிருக்கிறார்.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த செயின்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணி 178 ரன்கள் எடுத்தது. இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய டிரின்பாகோ நைட்ரைடரஸ் அணி நிக்கோலஸ் பூரன் மற்றும் கீரன் பொல்லார்ட் ஆகியோரது அதிரடியான ஆட்டத்தின் மூலம் 17.1 ஓவரில் இலக்கை எட்டி அபார வெற்றி பெற்று ஆட்டத்தை முடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.