கம்பீர் என்மீது நம்பிக்கை வைத்து தொடக்க வீரராக களமிறக்கினார் - சுனில் நரைன்!

Updated: Tue, Apr 16 2024 22:54 IST
Image Source: Google

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி கொல்கத்தாவில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறக்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு பில் சால்ட் மற்றும் சுனில் நரைன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பில் சால்ட் 10 ரன்கள் மட்டும் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார்.

அதன்பின் வந்த அங்கிரிஷ் ரகுவன்ஷு, நரைனுடன் சிறப்பாக விளையாடி அணிக்கு ரன்களை சேர்த்து வந்தார். தொடக்கத்தில் ஆட்டத்தை சற்று தடுமாற்றத்துடன் தொடங்கிய நரைன் போக போக அதிரடி காட்ட தொடங்கினார். அதேசமயம் மறுபக்கம் அவருக்கு துணையாக விளையாடி வந்த ரகுவன்ஷி அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 30 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.

அதனைத் தொடர்ந்து வந்த ஸ்ரேயாஸ் ஐயர் 11 ரன்னிலும், ஆண்ட்ரே ரஸல் 13 ரன்னிலும், வெங்கடேஷ் ஐயர் 8 ரன்னிலும் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தாலும், மறுபக்கம் சுனில் நரைன் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் 49 பந்துகளில் சதமடித்து அசத்தினார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட்கள் இழப்பிற்கு 223 ரன்களை குவித்தது. ராஜஸ்தான் அணி சார்பில் ஆவேஷ் கான் மற்றும் குல்தீப் சென் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர். 

இந்நிலையில் இன்னிங்ஸ் முடிவில் பேசிய சுனில் நரைன், “இந்த சீசன் தொடங்குவதற்கு முன்னதாக நான் ஆரஞ்சு கேப்பிற்கான போட்டியில் இருப்பேன் என்று யாராவது கூறியிருந்தால், அதை நான் நகைச்சுவையாக எடுத்திருப்பேன். ஏனென்றால் நான் இவ்வளவு நாள் தொடக்க வீரராக களமிறங்காமலும், கடந்த சில ஆண்டுகளாக பேட்டிங்கில் சரிவர செயல்படாமலும் இருந்தேன். ஆனால் இந்த ஆண்டு கௌதம் கம்பீர் மீண்டும் எங்கள் அணியில் இணைந்ததுடன் என்னை தொடக்க வீரராகவும் களமிறங்க நம்பிக்கை கொடுத்தார். 

 

அதன்படி எனது வேலை என்னவென்றால் நான் தொடக்க வீரராக களமிறங்கி அதிரடியாக விளையாடுவதுடன் அணிக்கு தேவையான ரன்களைச் சேர்க்க வேண்டும் என்பது மட்டும் தான். ஏனெனில் நீங்கள் பவர்பிளேவில் அதிக டாட் பந்துகளை எதிர்கொண்டால், இறுதியில் நீங்கள் ரன்களைச் சேர்க்க அது கடினமாக இருக்கும். அதனால் சூழ்நிலை எப்படி இருந்தாலும் அதனை பொறுட்படுத்தாமல் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்ப்பது மட்டுமே எனது வேலை.அதனால் நீங்கள் களமிறங்கி அணிக்கு தேவையான தொடக்கத்தைக் கொடுக்க முயற்சி செய்யுங்கள் என்று கம்பீர் என்னிடம் கூறினார்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை