அணியின் கேப்டன் பதவியிலிருந்து ஏன் நீக்கப்பட்டேன் என்று தெரியவில்லை - டேவிட் வார்னர்!

Updated: Wed, Oct 13 2021 14:45 IST
SunRisers Hyderabad's David Warner Says "Was Not Explained Why I Was Dropped As Captain" (Image Source: Google)

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் அடுத்த ஆண்டு சீசனிலும் தொடர்வதற்கு டேவிட் வார்னர் விருப்பமாக இருந்தாலும், அது நடக்குமா என்பது தெரியவில்லை. ஏனென்றால், இந்த சீசனில் கடைசி 5 போட்டிகளில் சிறந்த பேட்ஸ்மேன், முன்னாள் கேப்டனான வார்னரை பெஞ்ச்சில் அமரவைத்தனர்.

இந்த சீசனின் நடுப்பகுதியில் வார்னரிடம் இருந்து கேப்டன் பதவி பறிக்கப்பட்டது. கேப்டன் பதவி பறிக்கப்பட்ட பின்பிருந்து சன்ரைசர்ஸ் அணியின் ஆட்டமும் ஆட்டம் கண்டது. வார்னருக்கு பதிலாக கேன் வில்லியம்ஸன் கேப்டனாக நியமிக்கப்பட்டார். கடந்த 2018-ம் ஆண்டு பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் வார்னருக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டபோது வில்லியம்ஸன் கேப்டன் பொறுப்பேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய அரபு அமீரகத்துக்கு வந்தபின் சில போட்டிகளில் வார்னர் எதிர்பார்த்த பேட்டிங் செய்யவில்லை என்பதால், அவர் தொடர்ந்து 5 போட்டிகளில் அமரவைக்கப்பட்டார். வார்னர் என்ற ஒரு சீனியர் வீரர் மட்டும் பெஞ்ச்சில் அமரவைக்கப்படவில்லை என்று சன்ரைசர்ஸ் பயிற்சியாளர் டிரிவோர் பேலிஸ் விளக்கமும் அளித்தார்.

கடந்த 2016ஆம் ஆண்டு சன்ரைசர்ஸ் அணியை வழிநடத்தி கோப்பையைப் பெற்றுக்கொடுத்த வார்னர், ஐபிஎல் தொடரில் 4 ஆயிரம் ரன்களுக்கு மேல் அடித்த வார்னருக்கு கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டதற்கான காரணத்தையும் அணி நிர்வாகம் கூறவில்லை. அவரை நடத்திய முறையும் சரியில்லை.

அனைத்து சீசன்களிலும் மிகச் சிறப்பாக ஆடிய வார்னர், இந்த ஐபிஎல் சீசனில் 8 இன்னிங்ஸில் 195 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார்.

இந்நிலையில் டேவிட் வார்னர் அளித்த பேட்டியில் சன்ரைசர்ஸ் கேப்டன் பதவியிலிருந்து ஏன் நீக்கப்பட்டேன் என்பதற்கு விளக்கமும், காரணமும் தெரிவிக்கவில்லை. அதைத் தெரிந்துகொள்ள விரும்புகிறேன் என்று தனது ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்துள்ளார்.

இதுகுறித்து பேசிய வார்னர், “என்ன காரணம் என 100 சதவீதம் எனக்குத் தெரியாது. சன்ரைசர்ஸ் நிர்வாகத்தினர் மீதும், பயிற்சியாளர் டிரிவோர் பேலிஸ், லட்சுமண், டாம் மூடி, முரளிதரன் ஆகியோர் மீதும் மிகுந்த மதிப்பு வைத்திருக்கிறேன். ஒரு முடிவு எடுக்கப்படும்போது, அது ஒருமனதாக எடுக்க வேண்டும். 

ஆனால், எனக்கான மாற்று வீரர் யார், என்னை யார் தேர்வு செய்ய வேண்டும், என்னை யார் விரும்பவில்லை என எதுவுமே எனக்குத் தெரியாது. ஆனால், கடைசி நாளில், நான் விளையாடப் போவதில்லை என்ற தகவல் மட்டும் என்னிடம் கூறப்பட்டது.

எனக்கு இது மிகுந்த வேதனையாக இருந்தது. நான் ஏன் கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டேன் என்பதற்கு விளக்கம் அளிக்கப்படவில்லை. அதற்கான காரணமும் கூறப்படவில்லை. கடந்த காலங்களில் நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதை வைத்து சில விஷயங்கள் தீர்மானிக்கப்படும். அந்த வகையில் நான் சன்ரைசர்ஸ் அணிக்காக 95 போட்டிகளில் விளையாடியிருக்கிறேன்.

ஆனால், 4 போட்டிகளில் மட்டும்தான் மோசமாக விளையாடினேன், 2 முறை ரன் அவுட் ஆகினேன். அதிலும் சென்னை போன்ற மெதுவான, மந்தமான ஆடுகளத்தில்தான் இது நடந்தது. இதுபோன்ற கசப்பான விஷயங்களை ஜீரணிப்பது கடினமானது. ஆனால், நான் ஏன் கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டேன் என்பதற்கு விளக்கம் , பதில் இனிமேல் கிடைக்கும் என நான் நினைக்கவில்லை. ஆதலால் அடுத்த கட்டத்துக்கு நான் நகர்ந்துதான் ஆக வேண்டும்.

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

அடுத்துவரக் கூடிய ஐபிஎல் ஏலத்தை நோக்கியிருக்கிறேன். சன்ரைசர்ஸ் அணியை பிரதிநிதித்துவப் படுத்துவதைத் தவிர வேறு எதையும் நான் விரும்பவில்லை, ஆனால் முடிவு உரிமையாளர்களிடம் உள்ளது” எனது தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை