பிசிசிஐ தலைவர், செயலாளர் வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு!

Updated: Thu, Sep 15 2022 11:06 IST
Supreme Court Allows Amendment To BCCI Constitution; Ganguly-Shah To Continue For 3 More Years (Image Source: Google)

இந்தியாவில் நடைபெறும் ஒட்டுமொத்த கிரிக்கெட்டையும் நிர்வகிக்கும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் எனப்படும் பிசிசிஐ அரசு சாராத தனிமையான அமைப்பாகும். மேலும் அதன் தலைவராக முன்னாள் இந்திய கேப்டன் சௌரவ் கங்குலி கடந்து 2019இல் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அதே போல் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயலாளர் பதவியில் தற்போதைய இந்திய அரசில் முக்கிய அமைச்சராக இருக்கும் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா நியமிக்கப்பட்டார். 

இதில் கடந்த 2000ஆம் ஆண்டில் கேப்டனாக பொறுப்பேற்ற போது சூதாட்ட சர்ச்சையில் சிக்கி தவித்த இந்தியாவை தனது அதிரடியான கேப்டன்ஷிப் வாயிலாக அடுத்த சில வருடங்களிலேயே வெற்றிநடை போட வைத்து ஏராளமான வெற்றிகளை பெற்றுக்கொடுத்த கங்குலி தலைவராக நியமிக்கப்பட்டது நிறைய ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்தது.

ஏனெனில் இந்திய கிரிக்கெட்டை வளப்படுத்திய அவர் வாரியத்தையும் சிறந்த முறையில் நிர்வகிப்பார் என்று அனைத்து ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் நம்பினர். அதற்கு ஏற்றார்போல் பொறுப்பேற்றதும் உள்ளூர் கிரிக்கெட் வீரர்களுக்கான சம்பளத்தை உயர்வதற்கான முதல் கையெழுத்து போட்ட கங்குலி அதுவரை யோசித்து வந்த பகலிரவு டெஸ்ட் போட்டியில் வங்கதேசத்துக்கு எதிராக கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் இந்தியா விளையாடுவதற்கான ஏற்பாடுகளையும் செய்தார். 

அதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்த நிலையில் பிசிசிஐ மற்றும் அதன் கீழ் இயங்கும் மாநில வாரியத்தின் நிர்வாகத்தில் செயல்படும் யாராக இருந்தாலும் 6 வருடம் மட்டுமே பதவியில் இருக்க முடியும் என்ற விதிமுறை உள்ளது. அந்த வகையில் 2019க்கு முன்பாக பெங்கால் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருந்த சவுரவ் கங்குலியின் 6 வருட பதவிக்காலம் கடந்த 2020ஆம் ஆண்டிலேயே நிறைவுற்றது. அதேபோல் 2013 முதல் குஜராத் கிரிக்கெட் வாரியத்தில் நிர்வாகியாக செயல்பட்டு வந்த ஜெய் ஷா பதவிக் காலமும் நிறைவு பெற்றது. 

ஆனாலும் அவரும் அவரது தலைமையிலான நிர்வாகிகளும் பிசிசிஐ தலைமைப் பொறுப்பில் மேலும் சில வருடங்கள் தொடர விரும்புவதால் அந்த விதிமுறைகளை மாற்றி புதிய விதிமுறைகளை உருவாக்கி அதற்கு அனுமதியளிக்குமாறு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர். அதனால் இது வரை பதவி காலம் முடிந்தும் தொடர்ந்து அவரவர் பதவிகளில் செயல்பட்டு வந்த நிலையில் இந்த வழக்கு கடந்த சில மாதங்களாக உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அதனுடைய முக்கிய வாதம் இன்று உச்ச நீதிமன்றத்தில் டிஒய் சந்திரசுத் மற்றும் ஹிமா கோலி ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் அமர்வு முன்பாக நடைபெற்றது. 

அதில் பிசிசிஐ சார்பில் வாதாடிய துஷார் மேத்தா ஒரு அரசு சாரா தனியார் அமைப்பாக கடந்த 70 வருடங்களாக ஐசிசி கட்டுப்பாட்டில் சர்வதேச கிரிக்கெட்டில் வெற்றிகரமாக நாட்டிற்கு பெருமை சேர்த்து வரும் அமைப்பாக பிசிசிஐ செயல்பட்டு வருகிறது என்பதால் அதன் நிர்வாகத்தை நடத்துவதற்கு தேவையான முடிவுகளை எடுக்கும் நிர்வாகிகள் பதவி காலத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களுக்கு அனுமதி வழங்குமாறு வாதிட்டார்.

அதை ஆராய்ந்து ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு புதிதாக மாற்றப்பட்டு பிசிசிஐ கோரிய விதிமுறைகளுக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. அதாவது தற்போதும் அல்லது இனிவரும் காலங்களிலும் பிசிசிஐ அல்லது மாநில கிரிக்கெட் வரியா நிர்வாக பொறுப்பில் இருப்பவர்களின் பதவி காலம் ஏற்கனவே இருந்த 6 வருடங்களிலிருந்து 12 வருடங்களாக மாற்றப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக ஒருவர் பிசிசிஐ அமைப்பில் 6 வருடங்களும் மாநில வாரிய அமைப்பில் 6 வருடங்களும் பதவியில் நீடிக்கலாம்.

இதனால் பிசிசிஐ எதிர்பார்த்த தீர்ப்பு வந்துள்ளதால் ஏற்கனவே தலைவராக இருக்கும் சௌரவ் கங்குலி 2வது முறையாக மீண்டும் அடுத்த 3 வருடங்களுக்கு தலைவராக நீடிக்க உள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது. அவருடன் ஜெய் ஷா உள்ளிட்ட தற்போதைய பிசிசிஐ தலைமையில் இருக்கும் பெரும்பாலான நிர்வாகிகளும் அடுத்த 3 வருடங்கள் தொடர்ந்து அவரவர் பதவிகளில் செயல்படுவார்கள் என்று தெரிய வருகிறது.

இந்த தீர்ப்புக்கு சில ரசிகர்கள் ஆதரவு தெரிவித்தாலும் சமீப காலங்களில் அணியின் தேர்வு, விராட் கோலி கேப்டன்ஷிப் போன்ற அம்சங்களில் சவுரவ் கங்குலியின் தலையீடு இருந்ததால் நிறைய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை