பந்துவீச்சாளர்கள் செயல்பட்ட விதம் குறித்து பெருமைப்படுகிறேன் - சூர்யகுமார் யாதவ்!

Updated: Mon, Nov 11 2024 09:12 IST
Image Source: Google

தென் ஆப்பிரிக்க - இந்திய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி செயிண்ட் ஜியார்ஜ் பார்க் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ய, அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. இதில் சஞ்சு சாம்சன் ரன்கள் ஏதுமின்றியும், அபிஷேக் சர்மா 4 ரன்களிலும் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் சூர்யகுமார் யாதவும் 4 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.

இதனையடுத்து சிறிது நேரம் தாக்குப்பிடித்து விளையாடிய திலக் வர்மா 20 ரன்களுக்கும், அக்ஸர் படேல் 27 ரன்களுக்கும் என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ரிங்கு சிங்கும் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஹர்திக் பாண்டியா 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 45 ரன்களைச் சேர்த்து அணியை ஓரளவு நல்ல ஸ்கோரை நோக்கி அழைத்துச் சென்றார். இதன்மூலம் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 124 ரன்களை எடுத்தது. 

அதன்பின், 125 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு இந்திய பந்துவீச்சாளர்கள் தொடக்கம் முதலே நெருக்கடி கொடுத்தனர். அந்த அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் ரியான் ரிக்கெல்ட்சன் 13 ரன்களிலும், ரீஸா ஹெண்ட்ரிக்ஸ் 24 ரன்களிலும், கேப்டன் ஐடன் மார்க்ரம் 3 ரன்களிலும் ஆட்டமிழக்க, நட்சத்திர வீரர்கள் ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர் ஆகியோரும் சொற்ப ரகளில் விக்கெட்டை இழந்தனர். 

இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 47 ரன்களையும், ஜெரால்ட் கோட்ஸி 19 ரன்களையும் சேர்த்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். இதன்மூலம் தென் ஆப்பிரிக்க 19 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி 1-1 என்ற கணக்கில் டி20 தொடரை சமன்செய்துள்ளது. இப்போட்டியில் சிறப்பாக செயல்பட்ட டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

இந்நிலையில் இப்போட்டியில் அடைந்த தோல்வி குறித்து பேசிய இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ், “இப்போட்டியில் நாங்கள் பேட்டிங் செய்த சமயத்தில் இந்த ஆடுகளம் ரன்களைச் சேர்க்க முடியாத வகையில் செயல்பட்டது. அதனால் பேட்டர்களால் எவ்வளவு ரன்களைச் சேர்க்க முடிகிறதோ, அதனை வைத்து போராட வேண்டியது அவசியமாகும். ஆனால் நீங்கள் டி20 கிரிக்கெட்டில் 125 ரன்களோ அல்லது 140 ரன்களையோ எடுப்பதை விரும்பமாட்டோம்.

Also Read: Funding To Save Test Cricket

இருப்பினும் எங்கள் அணி பந்துவீச்சாளர்கள் செயல்பட்ட விதம் குறித்து பெருமைப்படுகிறேன். இதுபோன்ற கடினமான சூழலில் ஒரு பந்துவீச்சாளர் 5 விக்கெட்டுகளை வீழ்த்து என்பது அற்புதமான விஷயம். இதற்காக வருண் சக்கரவர்த்தி கடினமான உழைத்து வருகிறார். அதேபோல் இப்படியான தருணத்திற்காக நீண்ட காலமாக காத்திருந்தார் என்று சொல்ல வேண்டும். இன்னும் இத்தொடரில் 2 போட்டிகள் மீதமுள்ளது. அதனால் அதில் நாங்கள் சிறப்பாக செயல்படுவோம்” என தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை