ரிங்கு, நிதீஷை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன் - சூர்யகுமார் யாதவ்!

Updated: Thu, Oct 10 2024 08:35 IST
Image Source: Google

இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணியானது முதலில் பந்துவீசவதாக அறிவித்து இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது நிதிஷ் குமார் மற்றும் ரிங்கு ரிங் ஆகியோரது அரைசதத்தின் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்திருந்தாலும், 221 ரன்களை குவித்தது. இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய நிதிஷ் குமார் ரெட்டி 34 பந்தில் 74 ரன்களையும், ரிங்கு சிங் 29 பந்துகளில் 53 ரன்களையும் சேர்க்க, ஹர்திக் பாண்டியா தனது பங்கிற்கு 32 ரன்களைக் குவித்து அணிக்கு ஃபினிஷிங்கை கொடுத்தார். 

வங்கதேச அணி தரப்பில் ரிஷாத் ஹொசைன் 3 விக்கெட், தஸ்கின் அகமது, தன்சிம் அகமது, முஸ்தஃபிசூர் ரஹ்மான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதையடுத்து, 222 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணியானது இந்திய அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். அந்த அணியில் மஹமதுல்லா மட்டும் தனி ஆளாகப் போராடி 41 ரன்கள் எடுத்தார்.

இறுதியில், வங்கதேசம் அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 135 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய நிதீஷ் ரெட்டி மற்றும் வருண் சக்ரவர்த்தி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.  இதன்மூலம் இந்திய அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி வெற்றி பெற்றதுடன், டி20 தொடரை 2-0 என கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் இப்போட்டியின் வெற்றி குறித்து பேசிய இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ், “நாங்கள் தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்தால் எங்கள் அணி எவ்வாறு செயல்படும் என்பதை அறிய, நான் அந்த சூழ்நிலையை விரும்பினேன். அதற்கேற்றவாரே அணியின் 4,5,6 நிலை பேட்டர்கள் இப்போட்டியில் சிறப்பாக செயல்பட்டனர். அதிலும் குறிப்பாக இப்போட்டியில் அரைசதம் அடித்த ரிங்கு சிங் மற்றும் நிதீஷ் குமார் ஆகியோரை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன்.

நான் விரும்பியபடியே அவர்கள் பேட்டிங் செய்தனர். ஏனெனில் அணியில் உள்ள அனைத்து வீரர்களும் தங்களது திறனை களத்தில் வெளிப்படுத்த வேண்டும். அந்தவகையில் எங்களின் ஜெர்சி மட்டும் மாறுகிறதே தவிர, மீதமுள்ளவை அப்படியே இருக்கும். வெவ்வேறு சூழ்நிலைகளில் வெவ்வேறு பந்துவீச்சாளர்கள் என்ன செய்ய முடியும் என்பதைப் பார்க்க விரும்பினேன். கடினமான ஓவர்களை அவர்களால் கொடுக்க முடியுமா? என்பதை சோதனை செய்தேன்.

Also Read: Funding To Save Test Cricket

ஏனெனில் சில சமயம் ஹர்திக் பாண்டியாவால் பந்து வீச முடியாத நிலை ஏற்படலாம், சில சமயம் வாஷிங்டன் சுந்தர் பந்து வீச முடியாத நிலை ஏற்படலாம். அதனால் அத்தகைய சூழலில் எங்களின் மற்ற வீரர்கள் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பதை நான் பார்க்க விரும்பினேன், அது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. மேலும் இது நிதீஷ் குமாருடைய நாளாக இருந்தது, அதனால் பந்துவீச்சிலும் அவர் சிறப்பாக செயல்பட்டு அவரது மகிழ்ச்சியை பெரிதாக்கட்டும் என்று நினைத்தேன்” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை