ஐசிசி டி20 தரவரிசை: பாபர் ஆசாமை முந்தினார் சூர்யகுமார் யாதவ்!
மொகாலியில் நடந்த முதல் டி20 போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியிடம் வீழ்ந்தது. இருப்பினும் இந்த போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர்.
அதிலும் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் 25 பந்துகளில் 46 ரன்களையும், கேஎல் ராகுல் 35 பந்துகளில் 55 ரன்கள் என சிறப்பான பங்களிப்பை வழங்கி இருந்தனர்.
இந்நிலையில், ஆண்களுக்கான ஐசிசி டி20 பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் பாபர் அசாமை பின்னுக்குத் தள்ளி சூர்யகுமார் யாதவ் 780 புள்ளிகளுடன் 3ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
இந்தப் பட்டியலில் பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் 825 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். 2ஆவது இடத்தில் தென் ஆப்பிரிக்க அணியின் ஐடன் மார்க்ராம் உள்ளார். மூன்றாவது இடத்தில் சூர்யகுமார் யாதவும், நான்காம் இடத்தில் பாபர் ஆசாமும் உள்ளது.
மேலும் இப்பட்டியலில் கேஎல் ராகுல் 5 இடங்கள் முன்னேறி 18ஆவது இடத்தை பிடித்துள்ளார். இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 14ஆவது இடத்திலும், முன்னாள் கேப்டன் விராட் கோலி 16ஆவது இடத்திலும் அங்கம் வகிக்கின்றனர்.
அதேபோல், டி20 ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசை பட்டியலில் ஹர்திக் பாண்டியா மீண்டும் முதல் 5 இடங்களுக்குள் நுழைந்துள்ளார். அவர் தற்போது 180 புள்ளிகளுடன் 5ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.