இந்திய அணிக்கு மிகச் சிறப்பான தொடராக அமைந்தது - சூர்யகுமார் யாதவ்!

Updated: Mon, Dec 04 2023 10:08 IST
இந்திய அணிக்கு மிகச் சிறப்பான தொடராக அமைந்தது - சூர்யகுமார் யாதவ்! (Image Source: Google)

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது பெங்களூரு நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் மேத்யூ வேட் முதலில் தங்களது அணி பந்துவீசும் என்று அறிவித்தார்.

அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்களை குவித்தது. இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக ஷ்ரேயாஸ் ஐயர் 53 ரன்களையும், அக்சர் பட்டேல் 31 ரன்களையும் குவித்து அசத்தினர்.

பின்னர் 161 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலியா அணியானது 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் மட்டுமே குவித்ததால் 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்த போட்டியில் தோல்வியை சந்தித்தது. இந்த போட்டியில் அவர்கள் அடைந்த தோல்வியின் மூலம் இந்த தொடரில் மட்டும் நான்காவது தோல்வியை சந்தித்துள்ளார்கள். அதேவேளையில் இந்திய அணி இந்த ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரை நான்குக்கு ஒன்று (4-1) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. 

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து இந்த டி20 தொடரில் இந்திய அணி பெற்ற வெற்றி குறித்து பேசிய கேப்டன் சூரியகுமார் யாதவ், “இந்த தொடரானது இளம் இந்திய அணிக்கு மிகச் சிறப்பான தொடராக அமைந்தது. எங்களது அணியின் வீரர்கள் அனைவருமே மிகச் சிறப்பான செயல்பாட்டை இந்த தொடர் முழுவதுமே வெளிப்படுத்தி உள்ளார்கள். 

இந்த தொடரில் நாங்கள் பயமற்ற மகிழ்ச்சியான ஒரு ஆட்டத்தை விளையாட வேண்டும் என்று நினைத்து விளையாடினோம். அந்த வகையில் இந்த தொடர் முழுவதும் எங்களால் சிறப்பாக செயல்பட முடிந்ததில் மகிழ்ச்சி.

குறிப்பாக இந்த போட்டியில் 160 முதல் 175 ரன்கள் வரை அடித்தால் அது வெற்றிக்கு போதுமான ரன்களாக இருக்கும் என்று நான் ஏற்கனவே நமது அணி வீரர்களிடம் கூறினேன். அந்த வகையில் சிறப்பாக அவர்களை கட்டுப்படுத்தி நாங்கள் பெற்ற இந்த வெற்றி எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது” என கூறியுள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை